எஸ்ஐ பணிக்கான போட்டித்தேர்வு 3 மையங்களில் 2,854 பேர் எழுதினர்

*1,300 பேர் ஆப்சென்ட்

திருவண்ணாமலை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் மூலம் 1,299 எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், அமைக்கப்பட்டிருந்த 3 மையங்களில் 3,082 ஆண்கள் மற்றும் 1,072 பெண்கள் என மொத்தம் 4,154 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

திட்டமிட்டபடி நேற்று திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி, எஸ்ஆர் ஜிடி எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது.

அதையொட்டி, காலை 9.30 மணி வரை தேர்வு மையத்தக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, தாமதமாக வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. பின்னர், பிற்பகல் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ்மொழி தகுதி தேர்வு நடைபெற்றது.

தேர்வு மையத்துக்கான நுழைவுச் சீட்டுடன், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையை பரிசோதித்த பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பை போன்றவற்றை தேர்வு மையத்துக்கு வெளியே வைத்துவிட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையத்துக்குள் முழுமையாக சோதித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், காலையில் நடைபெற்ற முதன்மை எழுத்து தேர்வு முடித்தவுடன், தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி அளிக்கவில்லை. பிற்பகல் நடைபெற்ற தமிழ்மொழி தகுதி தேர்வு முடிந்த பிறகே தேர்வு மையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தேர்வு மையங்களை எஸ்பி சுதாகர் நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், நேற்று நடந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த 4,154 பேரில், 2,854 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,300 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: