வரும் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி மக்கள் சபை கூட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: ராணிப்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மக்கள் சபை கூட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. வரும் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்று ராணிப்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழகம் முழுவதும் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை ஊராட்சியில் நேற்று காலை மக்கள் சபை கூட்டம் நடந்தது.  இதையடுத்து அங்கு மக்கள் சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  இந்த கூட்டத்தை பார்க்கும்போது வரும் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்பது மீண்டும் ஒருமுறை தெளிவாக தெரிகிறது. கடந்த  10 ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை. இருப்பினும் தமிழகத்தில் நாம்தான் ஆளுங்கட்சியை விட நிறைய பணிகள் செய்துள்ேளாம். உள்ளாட்சி தேர்தலை நடத்தவிட்டிருந்தால் திமுக பெருவாரியான வெற்றிகளை குவித்திருக்கும். கொரோனா காலத்தில் அதிகளவில் மக்களுக்கு சேவை செய்த இயக்கம் திமுக மட்டுமே. திமுகவின் கிராம சபை கூட்டங்களால் அதிமுக அரண்டுபோயுள்ளது.

இதனால் வழக்கு போட்டு தடுத்துள்ளனர். தற்போது நாம், ‘மக்கள் சபை கூட்டம்’ என்ற பெயரில் நடத்துகிறோம். இதை அவர்களால் தடுக்க முடியாது. திமுக சார்பில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் 99 சதவீதம் பெண்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயமாக வெற்றிபெற வேண்டும், என்று பெண்கள் உறுதியுடன் பங்கேற்றுள்ளனர். இன்று (நேற்று) அனைத்து நாளிதழ்களிலும் தமிழக அரசு 2 பக்க விளம்பரம் செய்துள்ளது.

அதில், அனைத்திலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறியுள்ளனர். இது அப்பட்டமான பொய். கோடி கோடியாக வசூலிக்கப்பட்ட மக்கள் வரிப்பணத்தில் பொங்கல் பரிசு வழங்கிவிட்டு தங்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்டதுபோல் அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய டோக்கன்களை வழங்கி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஒரு முதல்வர் இறப்பிற்கான காரணம் குறித்து இன்று வரை தமிழக மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் மறைந்த ஜெயலலிதாவின் இறப்பிற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்கப்படும்.

இன்றைய கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு நிவாரணத் தொகையாக ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதிமுக அரசு அதனை தட்டிக்கழித்து 1000 வழங்கியது. சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் பொங்கல் பரிசு என்று கூறி 2,500 வழங்கி மக்களை திசைதிருப்பி மறைமுகமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை அரசு வழங்கிய 3,500 உதவித் தொகையுடன் 1,500 சேர்த்து வழங்க வேண்டும், என்று திமுக சார்பில் கோரிக்கைவிடுத்தும் அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது அதிகமான விழிப்புணர்வுடன் நீங்கள் இருக்கிறீர்கள். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் இதே போல ஊராட்சி மன்றக் கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்தி, ஏறக்குறைய 12,600 ஊராட்சிகளுக்கு சென்றோம்.

அந்த ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்திய காரணத்தால் நாடாளுமன்றத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றி தி.மு.க.விற்கு கிடைத்தது. இப்பொழுது இந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தி முடித்து சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். நாடாளுமன்றத்தில் எவ்வாறு 39 இடங்களுக்கு 38ல் வெற்றி பெற்றோமோ, அதேபோல் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப் போகிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அந்த நம்பிக்கையோடுதான் நாங்கள் இருக்கிறோம். அந்த நம்பிக்கை எங்களைவிட உங்களுக்கு இருக்கிறது. மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

முதலீடுகள் குறித்த அரசின் சாயம் வெளுத்துவிட்டது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நூற்றுக்கணக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு விட்டோம். கோடிக்கணக்கில் முதலீடுகளை ஈர்த்து விட்டோம் என்று, திரும்ப திரும்ப பொய்களையே சொல்லி, ஜம்பம் பேசி வந்த முதல்வர் பழனிசாமியின் முகமூடியை, 28.12.20 தேதியிட்ட ஆங்கில நாளேடு, கழற்றி தரையில் வீசி விட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட முதலீடான 1 லட்சத்து 90 ஆயிரம் கோடியில் பெற்றது வெறும் 9.4 சதவீதம் மட்டும்தான்; அதாவது வெறும் ₹18 ஆயிரத்து 188 கோடிதான் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆகவே கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பெற்ற முதலீடுகள், ஆண்டுக்கு ₹1800 கோடிதான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. கொரோனா காலத்திலும் தொழில் முதலீடுகளை ஈர்த்ததில் முதல் மாநிலம் என்று அரசு பணத்தில், அதாவது மக்களின் வரி பணத்தில், பத்திரிகைகளில் இன்று 2 முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ள பழனிசாமியின் சாயம் வெளுத்து விட்டது. வேடம் கலைந்து விட்டது.

Related Stories: