ஆஸி. ஓபனில் ரோஜர் பெடரர் ஆடவில்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு

மெல்போர்ன்: ‘முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் முழுவதுமாக குணமடையவில்லை என்பதால், 2021 ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஆடவில்லை’ என்று ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரோஜர் பெடரர் கடந்த 2000ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தவறாமல் கலந்து கொண்டுள்ளார். 6 முறை ஆஸி. ஓபனில் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். ஆஸி. ஓபனில் 21 போட்டிகளில் தொடர்ந்து ஆடி, முத்திரை பதித்துள்ள ரோஜர் பெடரரின் சாதனை, இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

‘‘அறுவை சிகிச்சைக்கு பின்னர் நான் 90 சதவீதம் வரை குணமடைந்து விட்டேன். என்னால் இயல்பாக ஆட முடிகிறது. தினமும் 2 மணி நேரம் முழுமையாக இப்போது டென்னிஸ் பயிற்சியில் ஈடுபடுகிறேன். அதனால் 2021 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாமில் நான் ஆடுவேன்’’ என்று கடந்த வாரம் உறுதியாக பெடரர் கூறியிருந்தார். இந்நிலையில் ஆஸி. ஓபனில் ஆடவில்லை என்று நேற்று பெடரர் அறிவித்துள்ளார். பெடரரின் போட்டிகளை மேற்பார்வை செய்யும் டீம் 8 நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோனி காட்சிக்கும் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டுள்ளார்.

மற்றொரு புறம் 5 முறை ஆஸி. ஓபன் ஆடவர் ஒற்றையரில் ரன்னர் பட்டம் வென்றுள்ள இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஆண்டி முரேவுக்கு, 2021 ஆஸி. ஓபனில் பங்கேற்க நேரடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. . இடுப்பில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், கடந்த ஆண்டு எந்த போட்டியிலும் ஆண்டி முரே பங்கேற்கவில்லை. இதனால் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் அவர் தற்போது 122ம் இடத்தில் உள்ளார். எனினும் அவர் கடைசியாக ஆடிய போட்டியின் அடிப்படையில், அப்போது அவர் தரவரிசையில் எந்த இடத்தில் இருந்தார் என்பதை கருத்தில் கொண்டு, 2021 ஆஸி. ஓபனில் பங்கேற்க அவருக்கு நேரடி அனுமதி (வைல்ட் கார்ட்) வழங்கப்பட்டுள்ளதாக போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: