பெரியார், அண்ணா, கலைஞர் தந்த அறிவாயுதத்தால் சமூகநீதியை காப்போம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நெல்லை சமூகநீதி மாநாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர் தந்த அறிவாயுதத்தால் சமூகநீதி காப்போம் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். நெல்லையில் நடைபெற்ற பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று நிறைவுரையாற்றினார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பெரியார் சமூகநீதி மாநாட்டை எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் நெல்ைலயில் ஏற்பாடு செய்துள்ள எழுத்தாளர் சூர்யா சேவியரக்கு எனது மனமார்ந்த பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாரைப் பார்த்து இன்னமும் பயப்படுகிறார்கள். இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆனபிறகும் பயப்படுகிறார்கள். பேரறிஞர் அண்ணாவைப் பார்த்து பயப்படுகிறார்கள். கலைஞர் என்ற பெயரைச் சொன்னால் இன்னமும் சிலருக்கு பயமாக இருக்கிறது. என்ன காரணம்? இவர்கள் ஆயுதம் ஏதும் வைத்திருந்தார்களா? ஆயுத அமைப்பை நடத்தினார்களா? இல்லை, இவர்கள் வைத்திருந்தது அறிவாயுதம், இவர்கள் வைத்திருந்தது உண்மை என்ற கேடயம், அறிவும் உண்மையும் ஒரு இயக்கத்திடம் இருக்குமானால் அந்த இயக்கத்துக்கு வேறு எதுவும் தேவையில்லை. அத்தகைய அறிவியக்கமாம் திராவிட இயக்கம் இந்தத் தமிழ் மக்களுக்குத் தயாரித்துக் கொடுத்த கொடை தான் சமூகநீதி, இடஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை, அந்தச் சமூகநீதித் தத்துவத்தின் நூற்றாண்டு விழாவைத் தான் நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.  

இடஒதுக்கீடு, சமூகநீதியை மொத்தமாக எடுத்துவிட வேண்டும் என்பது தான் பாஜகவின் கொள்கை. அதைப் படிப்படியாகச் செய்து வருகிறார்கள்.எந்தச் சூழ்நிலை வந்தாலும் சமூகநீதியை, இடஒதுக்கீட்டை, வகுப்பு உரிமையை விட்டுத் தர மாட்டோம் என்பதுதான் நமது கொள்கை. திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் சமூகநீதியின் எதிரியாக இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வை அடைந்துவிடுவார்கள், ஏழைகள் ஏற்றம் பெற்றுவிடுவார்கள் என்று நினைப்பவர்கள்தான் திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். இந்த ஒரு நோக்கத்துக்காகத்தான் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

தமிழர்களாகிய பலர் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் -லட்சக்கணக்கான ஏழை மக்கள்- வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகத் தான் திமுக ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். பின்னடைவில் இருந்தும் தமிழகத்தை மீட்போம் மக்கள் விடுதலைக் கட்சியின்  சார்பில் மதுரையில் நடைபெற்ற ‘தமிழகம் காப்போம்’ மாநில மாநாட்டில், திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்று ஆற்றிய சிறப்புரை: மக்கள்  விடுதலைக் கட்சியின் சார்பில் ‘தமிழகம் காப்போம்’ என்ற முழக்கத்தோடு  முன்னெடுக்கப்படும் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவதில்  மகிழ்ச்சி அடைகிறேன். பெருமையும் அடைகிறேன். அரசியல் ரீதியாக ஒரு கட்சியுடன்  இன்னொரு கட்சி கூட்டணி வைப்பதை நாம் விமர்சிக்கவில்லை.

அந்தக் கூட்டணியின்  மூலமாகத் தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்தால் அதைப் பற்றி நாம் கேள்வி  எழுப்பப் போவதில்லை. தமிழ்நாட்டை அடமானம் வைத்து பழனிசாமி தனது பதவியைக்  காப்பாற்றிக் கொள்கிறார் என்றால் அதை நாம் கை கட்டி வேடிக்கை பார்க்க  முடியாது. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததா? 2015ல் இருந்து 5  ஆண்டுகளாக எய்ம்ஸ் நாடகம் நடக்கிறதே தவிர, எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை  மாநில உரிமைகள் அடமானம், நிதி உரிமைகள் அடமானம், தமிழக சட்டசபைத்  தீர்மானத்துக்கு மரியாதை இல்லை, பேரிடர் கால நிதி தருவது கிடையாது.

ஜி.எஸ்.டி நிதி கிடையாது, இந்தி திணிக்கப்படுகிறது, தமிழ்  புறக்கணிக்கப்படுகிறது. கீழடி பெருமையை மறைக்கப்படுகிறது, சமூகநீதிக்குச்  சவக்குழி தோண்டப்படுகிறது. சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது, இப்படி  தமிழுக்கும்  தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்ட மொத்த  பின்னடைவையும் கடந்த பாஜக -அதிமுக காலத்தில் பார்த்துவிட்டோம். இனியும்  பொறுக்க முடியாது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: