சிவசேனா, சிரோன்மணி அகாலி தளத்தை தொடர்ந்து பாஜ கூட்டணியில் மேலும் ஒரு கட்சி விலகல்

ெஜய்ப்பூர்: சிவசேனா, சிரோன்மணி அகாலி தளம் கட்சிகளை தொடர்ந்து, வேளாண் சட்டங்களை எதிர்த்து தற்போது பாஜ  தலைமையிலான ேதசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக் தாந்த்ரிக்  கட்சியும் விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்துவிட்டது. நாளை மறுநாள் மீண்டும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

புதிய வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்ட போதே, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சி தனது கூட்டணி உறவை முறித்துக் கொண்டது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த ராஷ்ட்ரிய லோக்தாந்த்ரிக் கட்சியின் (ஆர்எல்பி) ஒருங்கிணைப்பாளரும், நாகவுர் தொகுதி எம்பியுமான ஹனுமான் பெனிவால் கடந்த சில நாட்களுக்கு முன் மூன்று நாடாளுமன்றக் குழுக்களில் வகித்த பதவியை ராஜினாமா செய்தார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் உறுப்பினராக இருந்த நாடாளுமன்ற குழுக்களில் மக்கள் பிரச்னைகள் பற்றி குரல் எழுப்பினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. குரல் எழுப்பியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடாளுமன்ற குழுக்கள் இருப்பதற்கே நியாயமில்லை. பிரச்னைகளுக்கு செவி சாய்க்கப்படாததாலும், விவசாயிகள் போராட்டத்தாலும், நாடாளுமன்ற குழுக்களில் இருந்து ராஜினாமா செய்கிறேன்’ என்றார். இந்நிலையில், ராஷ்ட்ரிய லோக் தாந்த்ரிக் கட்சியானது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக எம்பி ஹனுமான் பெனிவால் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மக்களவைத் தேர்தலின் போது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கூட்டணி அமைத்தோம். வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேற்றாததால், கூட்டணியில் இருந்து ஆதரவை வாபஸ் பெறுகிறோம்‘ எங்கள் கட்சியினர் தொடர்ந்து இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருவோம்’ என்றார்.  சிவசேனா, சிரோன்மணி அகாலி தளம் கட்சிகளை தொடர்ந்து தற்போது பாஜ தலைமையிலான ேதசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக் தாந்த்ரிக் கட்சியும் விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: