தர்மபுரி வத்தல்மலையில் சோழர் கால ஆநிரை நடுகல் கண்டுபிடிப்பு: 13ம் நூற்றாண்டை சேர்ந்தது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ஆநிரை நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், வத்தல்மலை பகுதியில் தர்மபுரி அரசு வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் சந்திரசேகர் மற்றும் ஆய்வாளர்கள் இம்ரான், இளந்திரையன், மதன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பெரியூர் அரசு பள்ளி அருகில் ஆநிரை மீட்டல் நடுகல் ஒன்றை குழுவினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வரலாற்று உதவி பேராசிரியர்கள் கூறியதாவது: வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 3600 அடி உயரம் கொண்டது. இங்கு தமிழ் மலையாளிகள் எனப்படும் பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். பெரியூர் தங்கராசு என்பவரது நிலத்தில் ஆநிரை மீட்டல் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டது.

இதன் உருவ அமைப்பை கொண்டு பார்க்கும்போது, சுமார் 12 அல்லது 13ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அதாவது பிற்காலச் சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். ஆநிரை மீட்டல் என்பது சங்க காலத்திலிருந்து இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு அரசர்கள் அல்லது குறுநில மன்னர்கள், தங்களது பலத்தை காட்டுவதற்காக அல்லது தான் போரிட விரும்புவதை அறிவிக்கும் விதமாக, அருகில் உள்ள நாட்டிலிருந்து பசுக்களை கவர்ந்து செல்வது வழக்கம்.

அவ்வாறு கவர்ந்து செல்லப்படும் பசுக்களை திரும்பவும் மீட்க நடைபெறும் போருக்கு ஆநிரை மீட்டல் என்று பெயர். ஆ என்றால் பசு, நிரை என்றால் கூட்டம். அவ்வாறு நடைபெறக்கூடிய போரில் மரணமடைந்த ஒரு வீரனுக்கு எழுப்பப்பட்டது தான், இந்த ஆநிரை மீட்டல் நடுகல். சற்று சிதைந்த நிலையில் காணப்படும் இக்கல்லில் உள்ள வீரனின் முகம் ஒருபக்கம் பார்த்தவாறும், போரிட்டு கொண்டிருக்கக் கூடிய நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஒருகால் தூக்கி வைத்தாற்போலவும், ஒரு கையில் கேடயமும், மறுகையை பின்புறமாக ஓங்கிய நிலையில் ஒரு சிறு கத்தியும் உள்ளவாறு காட்டப்பட்டுள்ளது. இவ்வீரனின் உருவத்தில் எந்தவித அலங்காரங்களும் பெரியதாக காட்டப்படவில்லை. கால் சட்டை மட்டும் அணிந்துள்ளவாறு காட்டப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள தமிழ் மலையாளிகள், காஞ்சிபுரம் பகுதியில் இருந்து இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு அஞ்சி, தங்களது கலாச்சாரத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டி புலம்பெயர்ந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் குடியேறியது பற்றி வாய்வழி கதைகளும், இலக்கியச் சான்றுகளும் குறிப்பிடுகின்றன. இம்மக்கள் குடியேறுவதற்கு முன்பிருந்தே, இப்பகுதியில் பெருங்கற்கால மக்கள் வாழ்விடங்கள் இருந்ததை அறிய முடிகிறது. இந்த ஆநிரை மீட்டல் நடுகல், இப்பகுதியில் சிறிய அளவிலான அரசுகள் இருந்ததையும், போர் நடைபெற்றதையும் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. எனவே, பெருங்கற்காலத்தில் இருந்து தொடர்ச்சியாக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்ததையும், சிறு அளவிலான இனக்குழுக்களோ அல்லது அரசுகளோ இயங்கி வந்ததை குறிப்பிடும் சான்றாக இந்த நடுகல்லை எடுத்துக் கொள்ள இயலும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: