அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்

வாடிப்பட்டி: அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு 2021 ஜனவரி மாதம் 14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறுகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா விதிமுறைகளுடன்  ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற அனுமதி கிடைத்ததையடுத்து காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த காளைகளுக்கு நீச்சல், நடைப்பயிற்சி, ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆரோக்கியத்திற்காக பருத்தி  விதை, புண்ணாக்கு, பேரீச்சம்பழம், பச்சரிசி, தேங்காய், நாட்டுக்கோழி முட்டை, கம்பு, மக்காச்சோளம் மற்றும் திணை அரிசி உள்ளிட்ட உணவுகள் காளைகளுக்கு வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து காளை உரிமையாளர்கள் கூறுகையில், ‘இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்றிருந்தோம். ஆனால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியதை தொடர்ந்து காளைகளை தீவிரமாக தயார்படுத்தி  வருகிறோம். நாள்தோறும் மண்மேடு மற்றும் நீர்நிலை அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று பல்வேறு பயிற்சி வழங்கி வருகிறோம். காலையும் மாலையும் சத்தான உணவுகளை வழங்கி காளைகளை புதுமாப்பிள்ளை போல் தயார் படுத்தி  வருகிறோம்’ என்றனர். இதுபோன்று அவனியாபுரம் பகுதியிலும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: