ஆப்ரிக்கன் நத்தை படையெடுப்பால் அழியும் நெல், வாழை விவசாயம்: மதுரை அருகே விவசாயிகள் கவலை

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே உள்ளது பரவை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், நெல் மற்றும் வாழை விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்பகுதியில் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த நத்தைகள் பெருமளவில் விவசாய பகுதிகளில் படையெடுக்க துவங்கியுள்ளன. ஆப்ரிக்க நாட்டில் உள்ள இந்த நத்தைகள் கேரள மாநிலங்களில் அதிகம் காணப்படும். தற்போது தமிழகத்திற்கு குறிப்பாக மதுரை மாவட்டத்தில் படையெடுப்பை துவங்கியுள்ளது. பரவையில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு அதிகளவில் வரும் கேரள லாரிகள் மூலம் இப்பகுதியில் புகுந்துள்ள இம்மாதிரியான நத்தைகள் தண்ணீர் மற்றும் மண்ணுக்கு அடியில் தனது இனப்பெருக்கத்தை நடத்துகின்றன.

 பின்னர் வாழை மற்றும் நெற்பயிர்களை தாக்க துவங்குகின்றன. வாழை மற்றும் நெற்பயிர்கள் மீது ஊர்ந்து செல்லும் இவ்வகை நத்தைகள் இலைகளின் மீது ஒட்டிக் கொண்டு அதன் சத்துக்களை உறிஞ்சி எடுத்து விடுகின்றன. இதனால் வாழை மரத்தில் வாழைக்காய் பெருக்காமல் சுருங்கி பெரும் சேதத்திற்கு உள்ளாகின்றன. அதே போல் நெற்பயிர்கள் பால் பிடித்து வரும் நிலையில் நெற்பயிருக்குள் புகுந்துள்ள நத்தைகள் அதன் சத்துக்களையும் உறிஞ்சி எடுத்து விடுவதால் வெகுவாக மகசூல் குறைந்து விடுகின்றன. இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இப்பகுதி விவசாயிகள், தற்காலிக நடவடிக்கையாக வரப்புகளில் கல் உப்புகளை தூவியும், பல்வேறு ரசாயன உரங்களை தெளித்து வருகின்றனர்.

இருப்பினும் நத்தைகளின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அய்யங்கோட்டை கிராமத்தை சேர்ந்த நவநீதன் என்பவரது வாழை மற்றும் நெற்பயிர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனை கட்டுப்படுத்தா விட்டால் அடுத்தகட்டமாக இப்பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஆப்ரிக்க நத்தைகளின் ஆக்கிரமிப்பு துவங்கிவிடும் அபாயம் உள்ளது.

Related Stories: