பாரிஸ் பருவநிலை ஒப்பந்த இலக்கை அடையும் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

சாந்திநிகேதன்: ‘பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் குறிக்கோளை விரைவில் அடைவதை நோக்கி முன்னேறும் ஒரே நாடாக இந்தியா இருக்கிறது,’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி கடந்த 2 மாதங்களில் மைசூரு, லக்னோ, அலிகார் முஸ்லிம் பல்கலை. மற்றும் விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் உள்ளிட்ட 4 பல்கலைக் கழகங்களின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழாவின் பட்டமளிப்பு விழாவிலும் நேற்று கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா, உலகின் மேம்பாட்டிற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தின் முக்கிய அம்சம் ரவீந்திரநாத் தாகூரின் தொலைநோக்கு பார்வையை அடிப்படையாக கொண்டதாகும். இது, நாட்டின் வளமையான, செழிப்பான முன்னேற்றத்திற்கான திட்டமாகும். இதன் மூலம், உலகமும் பயனடையும்.

ஏனென்றால், இந்தியாவின் சிறந்தவை அனைத்தும் உலகிற்கு கிடைக்க வேண்டும். அது போன்று, உலகின் சிறந்தவைகளை இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரவீந்திரநாத் தாகூர் நினைத்தார். விஸ்வ பாரதி என்ற இந்த பல்கலைக் கழத்தின் பெயரே, `உலகத்துடன் இந்தியாவின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு’ என்பதன் அர்த்தமாக உள்ளது. சர்வதேச சூரியசக்தி மின் உற்பத்தி கூட்டணியின் மூலம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா விளங்குகிறது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் குறிக்கோளை விரைவில் அடைவதை நோக்கி முன்னேறும் ஒரே நாடாக இந்தியா இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* மம்தாவுக்கு அழைப்பில்லை

விஸ்வ பாரதி பல்கலை. நூற்றாண்டு விழாவிற்கு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்காமல், மத்திய அரசு அவமதித்து விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், 20 நாட்களுக்கு முன்பே அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக பல்கலை. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: