சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல்: பட்டியல் சிக்கியதால் மேலும் சில அதிகாரிகள் கலக்கம்

சென்னை: சுற்று சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் வங்கி லாக்கரில் இருந்து கணக்கில் வராத ரூ.50 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், லாக்கரில் லஞ்சம் வாங்கிய முக்கிய அதிகாரிகள் பட்டியல் சிக்கியதால் அனைவரும் கலக்கமடைந்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கண்காணிப்பாளர் பாண்டியன் அறையில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.88,500 பணம் மற்றும் ரூ.38 லட்சத்து 66ஆயிரத்து 200 கணக்கில் வராத வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைதொடர்ந்து பாண்டியன் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.22 கோடி மதிப்புள்ள 3.81 கிலோ தங்கம் நகைகள், 3.343 கிலோ வெள்ளி பொருட்கள், 10.52 கேரட் வைரம், நிரந்தர வைப்பு நிதி கணக்கில் இருந்த ரூ.31 லட்சம் மற்றும் ரூ.7 கோடி மதிப்புள்ள 18 இடங்களில் உள்ள சொத்துக்கள் என ரூ.10.50 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் பாண்டியன் பெயரில் உள்ள வங்கி லாக்கர்கள் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திறந்து சோதனை நடத்தினர். அதில் இருந்து கணக்கில் வராத கட்டுக்கட்டாக ரூ.55 லட்சத்து 500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், லாக்கரில் தடையில்லா சான்று வழங்க பாண்டியன் பரிந்துரையில் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் லாக்கரில் கைப்பற்றப்பட்ட லஞ்சம் பெற்ற அதிகாரிகள் பட்டியலின்படி பாண்டியனிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது:  சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஜெயந்தி கடந்த செப்டம்பர் மாதம் வரை 130 கோப்புகளை நிராகரித்துள்ளார். அந்த கோப்புகள் அனைத்ைதயும் புதிதாக வந்துள்ள இயக்குநரும் கண்காணிப்பாளர் பாண்டியனும் இணைந்து சுற்றுச்சூழல்துறை இயக்ககத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று ஒப்பந்த அடிப்படையில் 10 ஆண்டுகளாக கண்காணிப்பாளராக பணியாற்றும் நகைமுகம், சிவதானு பிள்ளை ஆகியோர் அனைத்து கோப்புகளையும் கிளியர் செய்துள்ளனர்.

கூடுதல் கமிஷனராக உள்ள பெண் அதிகாரி மூத்த அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வேண்டியவர். ஒரேகட்டத்தில் பாண்டியன் செய்த அட்டகாசத்தை தாங்க முடியாமல் சம்பவம் குறித்து மூத்த அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

பொதுவாக மத்திய அரசு தமிழகத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் ஆய்வுகள், விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள நிதி உதவி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அளிக்கிறது. இந்த பணிகளை பல அரசு சாரா அமைப்புகள் மூலம் நிறைவேற்றுகிறார்கள். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பாண்டியன் தனது பினாமி பெயரில் சில என்.ஜி.ஓக்களை ஆரம்பித்துள்ளார்.

அந்த என்.ஜி.ஓ.க்கள் மூலம் மத்திய அரசு நிதியை பெற்று வந்தது தெரியவந்துள்ளது. அந்த வகையில் பாண்டியன் முறைகேடாக தொடங்கப்பட்ட என்.ஜி.ஓ நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு அரசு அளிக்கும் டீமேட் கணக்கில் இருந்து பணத்தை மாற்றி போலி ரசீதுகள் மூலம் பணத்தை எடுத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியை கருவூலம் மற்றும் கணக்குத்துறை பெண் அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். பாண்டியன் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட என்.ஜி.ஓ சார்பில் அளிக்கப்படும் ரசீதுகளுக்கு பணத்தை தரமாட்டேன் என்று கோப்புகள் மீது அந்த பெண் அதிகாரி எழுதிவைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அந்த பெண் அதிகாரியை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு மையத்திற்கு மாற்றிவிட்டார். பாண்டியன் தான் ஓய்வு பெற்ற பிறகு இங்கேயை பணி புரியும் வகையில் ‘சோஷியாலஜிஸ்ட்’ பதவியில் பல ஆண்டுகளாக யாரையும் நியமிக்காமல் தனக்கு சாதகமாக கருத்துக்களை தலைமை செயலகத்திற்கு அனுப்பி சாதகமாக முடிவுகளை பெற்று வந்துள்ளார். இந்த சாதகமான முடிவுக்கு உதவிய அரசு அதிகாரிகளை பாண்டியன் அந்தமானுக்கு விமானம் மூலம் அழைத்து சென்று அழகிகள் மற்றும் மது விருந்துகளை அளித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

* காப்பாற்ற அமைச்சர்களை நாடும் அதிகாரிகள்

பாண்டியனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற அதிகாரிகள் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாண்டியனுடன் மோசடியில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் தங்களுக்கு வேண்டிய மூத்த அமைச்சர்களை சந்தித்து இந்த வழக்கில் சிக்காமல் தங்களை பாதுகாக்கும் படி கோரிக்கை விடுத்து இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: