போதைப்பொருள் விற்க முயன்ற 2 நைஜீரியர்கள் கைது: ரூ.1 கோடி மதிப்பு மாத்திரை பறிமுதல்

பெங்களூரு: டார்க் வெப்சைட் மூலம் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் விற்பனை செய்ய முயற்சி செய்த நைஜீரியர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். சப்ளையர்களிடம் இருந்து கைப்பற்றிய போதை பொருட்களை கமிஷனர் கமல்பந்த் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

பெங்களூரு கிழக்கு மண்டல போலீசார்  பையப்பனஹள்ளி சரகத்திற்குட்பட்ட சிவி ராமன் நகர் கிருஷ்ணப்பா கார்டன் பகுதியில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடுதல் கமிஷனர் முருகன் வழிகாட்டுதலின் பேரில் கிழக்கு மண்டல போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது தனியார் கட்டிடம் அருகே காரில் இரண்டு வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமாக நின்றுக்கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, போதை பொருட்கள் இருந்தது. இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் நைஜீரியாவை சேர்ந்த டோன் சூகீஸ் ஓகீகி (39), செலீஸ்டின் அனுகுவா (40) என்று தெரியவந்தது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தன்று இரவு நேரங்களில் மதுபான விடுதி, பார், பப்பு ஆகியவை திறக்கப்படவில்லை என்பதால், போதை பொருள் விற்பனை ஜோராக இருக்கும் என்று நினைத்து,இங்கிலாந்தில் இருந்து டார்க் வெப் மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்துள்ளனர். அதை விற்பனை செய்யதிட்டமிட்டிருந்துள்ளனர்.

 விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.1 கோடி மதிப்பிலான 3,300 எம்.டி.எம்.ஏ போதை மாத்திரை, 600 கிராம் போதை மாத்திரைக்கான பொடி, ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட கிழக்கு மண்டல போலீசாருக்கு ரூ.40 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் 3 பேர் கைது

பெங்களூரு எலகங்கா சரகத்திற்குட்பட்ட பாலாஜி லே அவுட் கட்டிகேனஹள்ளி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக சி.சி.பி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எலகங்கா போலீசார் மற்றும் சி.சி.பி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் அமர்ந்து போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.

இவர்களில் இரண்டு பேர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த பிரசூன் (27), கன்னூரை சேர்ந்த ஆனந்த் சந்திரன் (27) என்றும், ஒருவர் நைஜீரியாவை சேர்ந்த யூடியூடி உஜ்ஜி (33)என்று தெரியவந்தது.  ரூ.5 லட்சம் மதிப்பிலான 100 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள், ஒரு கார், ஒரு பைக்கை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: