உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் விவகாரம்: 12 ரூபாய் ஸ்டிக்கருக்கு ரூ.991 வசூல் செய்வதா?: உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு

புதுடெல்லி: உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் மற்றும் எரிபொருள் ஸ்டிக்கர் விவகாரத்தில் ரூ.342 கோடி வசூலிக்க உள்ளதாகவும், ரூ.12 மதிப்புள்ள ஸ்டிக்கருக்கு ரூ.991 வசூலிப்பதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில்குமார் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் மற்றும் எரிபொருள் ஸ்டிக்கர் ஒட்ட ஆம்ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி மக்களிடம் இருந்து ரூ.342 கோடி கூடுதலாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிர்ணயித்த கட்டணத்தை விட 10 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் மற்றும் எரிபொருள் ஸ்டிக்கர் இரண்டையும் சேர்ந்து வாங்கினால் கூட ஐந்து மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எரிபொருள் நிறத்தை காட்டும் ஸ்டிக்கர் விலை ரூ.12.15. உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் விலையும் சேர்ந்து மொத்தம் ரூ.213.24 தான் வருகிறது. ஆனால் வாடிக்கையாளர் கட்டணம் ரூ.141.60(வரி இல்லாமல்) உள்பட நம்பர் பிளேட், ஸ்டிக்கர் ஆகியவை சேர்ந்து தற்போது ரூ.991.20 வசூலிக்கப்படுகிறது. இதை பொருத்தவில்லை என்றால் வாகன ஓட்டிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக ரூ.5,500 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனால் டெல்லி மக்கள் பயத்தால் மன ரீதியான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

ஒருவர் அரசு அறிவித்தபடி நம்பர் பிளேட் மற்றும் ஸ்டிக்கர் வாங்கினால் ரூ.991.20தான் ஆகிறது. ஆனால் அபராதம் அதைவிட 5 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதைப்பார்க்கும் போது தனிநபர்கள் பயன் அடைய இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது.

சிலருக்கு ஸ்டிக்கர் மட்டும் தான் தேவைப்படுகிறது. ஆனால் அவர்களையும் ஒட்டுமொத்தமாக நம்பர் பிளேட் மற்றும் ஸ்டிக்கரை இணைத்து வாங்க கட்டாயப்படுத்துகிறார்கள்.

 டெல்லியில் 35 லட்சம் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் மட்டுமே தேவை. அதற்கு கட்டணம் ரூ.12.15 மட்டுமே. ஆனால் ஒட்டுமொத்தமாக ரூ.991.20 கொடுத்த முழு செட்டையும் வாங்கும்படி மக்களைகட்டாயப்படுத்துகிறார்கள். இதன் மூலம் ஒரு வாகனத்திடம் இருந்து ரூ.979.05 லாபம் சம்பாதித்து ரூ.342 கோடி வசூலிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் வீட்டில் கொண்டு வந்து ஸ்டிக்கரை கொடுக்க ரூ.118 கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இவையெல்லாம் உச்ச நீதிமனற் விதிமுறை மீறல் ஆகும். எனவே ஸ்டிக்கர் மட்டும் தேவைப்படும் வாகன ஓட்டிகளிடம் இருந்து ஸ்டிக்கருக்கான ரூ.12.15 மட்டும் வசூலித்து விட்டு மீதம் உள்ள பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீட்டிற்கே வந்து வழங்கும் முறையையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories: