கேள்வி கேட்பதும், விமர்சிப்பதும் உரிமை; அக்னி வீரர் திட்டத்தை விமர்சிக்க கூடாது என்பது தவறு: தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: அக்னி வீரர் திட்டத்தை விமர்சனம் செய்ய கூடாது என தேர்தல் ஆணையம் கூறுவது தவறானது என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர்கள் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னி வீரர் திட்டம் அகற்றப்படும் என்று உறுதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஒரு கடிதம் அனுப்பி இருந்தது. அந்த கடிதத்தில், “பாதுகாப்பு படைகள் குறித்து பேசும்போது அவற்றை அரசியலாக்க வேண்டாம். ராணுவத்தின் சமூக, பொருளாதார கட்டமைப்பை பிளவுப்படுத்தும் விதமாக கருத்துகளை வௌியிட வேண்டாம்” என அறிவுறுத்தி இருந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தலுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தன் டிவிட்டர் பதிவில், “அக்னி வீரர் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருப்பது மிகவும் தவறு. அரசியலாக்குவது என்றால் என்ன? விமர்சனம் செய்வதை அரசியலாக்குவது என தேர்தல் ஆணையம் சொல்கிறதா? அக்னி வீரர் திட்டம் ஒன்றிய அரசின் கொள்கையால் உருவான திட்டம். இந்த கொள்கை பற்றி விமர்சிப்பதும், கேள்வி கேட்பதும், ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை அகற்றுவோம் என பிரசாரம் செய்வதும் எதிர்க்கட்சியின் உரிமை.

ராணுவத்தில் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய வீரர்களை இரண்டு வகையாக பிரித்த அக்னி வீரர் திட்டம் தவறு. ஒரு இளைஞனை 4 ஆண்டுகள் பணியமர்த்தி விட்டு, அதன்பின் வேலையும் இல்லாமல், ஓய்வூதியமும் இல்லாமல் துரத்தியடிக்கும் திட்டம் தவறு. அக்னி வீரர் திட்டத்தை இந்திய ராணுவமே எதிர்த்தது. ஆனால் ஒன்றிய அரசு ராணுவத்தின் மீது தன்கொள்கையை திணித்தது தவறு. தவறுகளாகவே உள்ள அக்னி வீரர் திட்டம் நிச்சயம் அகற்றப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு இதுபோன்ற தவறான வழிகாட்டுதலை தேர்தல் ஆணையம் அளித்திருப்பது மிகவும் மோசமான நடவடிக்கை. ஒரு இந்திய குடிமகனாக தேர்தல் ஆணையத்தின் தவறை சுட்டிக்காட்டுவது என் உரிமை” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

The post கேள்வி கேட்பதும், விமர்சிப்பதும் உரிமை; அக்னி வீரர் திட்டத்தை விமர்சிக்க கூடாது என்பது தவறு: தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: