நீ வருவாய் என நான் இருந்தேன்.. வாதம் நடத்த அமைச்சர் வரவில்லை: ஊத்திக்கிச்சி உ.பி மாடல்: சிசோடியா கிண்டல்

புதுடெல்லி: சிறந்த நிர்வாகம் என வாதம் நடத்த வரும்படி விடுத்த சவாலை ஏற்று உத்தரப்பிரதேச மாநிலம் சென்ற துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இரவு வரை காத்திருந்தும் அம்மாநில அமைச்சர் வராததை கிண்டலடித்து உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 2022ல் நடைபெற உள்ளது. கல்வி மற்றும் மின்சார விநியோகத்தில் மிகவும் பின்தங்கி உள்ள உத்தரப்பிரதேசத்தில் டெல்லி மாடல் ஆட்சியை அறிமுகப்படுத்த வேண்டி, வரும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அங்கு போட்டியிடும் என டெல்லி முதல்வரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 12ம் தேதி கூறியிருந்தார்.

அதனால் உச்சகட்ட வெறுப்படைந்த உத்தரப்பிரதேச மாநில கல்வி அமைச்சர் சதீஷ் த்விவேதி, ‘‘உத்தரப்பிரதேசத்தில் எல்லாமே சிறப்பாக நிர்வாகம் செய்யப்படுகிறது. எதுவும் தெரியாமல் பேசும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான சிசோடியாவும் உத்தரப்பிரதேசம் வருகை புரிந்து, இங்குள்ள பள்ளிகளின் செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பை பார்த்து தெரிந்து கொண்டு என்னுடன் விவாதம் நடத்த தயாரா’’, என மறுதினமே சவால் விட்டிருந்தார்.

சதீஷுக்கு பதிலளித்து சிசோடியா கூறுகையில், ‘‘வரும் 22ல் லக்னோ வருகிறன். அரசு பள்ளிகளில் சிறப்பாக கருதும் 10 பள்ளிகளை நீங்களே தேர்வு செய்யுங்கள். கடந்த 4 ஆண்டுகளில் அந்த பள்ளிகள் செயல்பட்ட விதம், மாணவர்கள் மேம்பட்டனரா, தேர்வு முடிவுகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளதா, போட்டித்தேர்வுகளை சந்திக்கும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு ஏற்பட்டதா என பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வேன். மேலும் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக ஆய்வு செய்த பின்னர், உங்களது சவாலை ஏற்கும் விதமாக உடனடியாக விவாதிக்கவும் தயாராக உள்ளேன்’’, எனக் கூறியிருந்தார்.

அதன்படி லக்னோவுக்கு சிசோடியா நேற்று சென்றார். ஆம் ஆத்மி கட்சியின் உத்தரப்பிரதேச மாநில பொருப்பாளரும், எம்.பியுமான சஞ்சய் சிங் அவரை வரவேற்றார். அதைத் தொடர்ந்து, விவாதம் நடத்த உத்தரப்பிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்த கைசர்பாக் பகுதியின் காந்தி பவன் சென்று அங்கு தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் சிசோடியா அமர்ந்தார். அதையடுத்து நிருபர்களிடம் சிசோடியா கூறியதாவது: காலியாக உள்ள இருக்கையில் அமர அமைச்சர் சித்தார்த் நாத் சிங் வருகைக்காக காத்திருக்கிறேன். உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களிடம் இருந்து இந்த மாநிலத்தில் கல்வி, சுகாதாரம், மின்சாரம் போன்ற துறைகள் டெல்லியைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது எனும் நிரூபணம் குறித்த தகவலை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

டெல்லியில் நாங்கள் ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு அளித்தனர். அதன் பின்னர் அரசு பள்ளிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. மாணவர் தேர்ச்சி பிரமிக்கதக்க அளவில் மாற்றம் கண்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவை நிருபர்கள் பார்வையிட கொண்டு வந்துள்ளேன். தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் 5 ஆண்டுகளாக உயர்த்த அனுமதிக்கவில்லை. டெல்லியில் மின் தடங்கல் என்ற பேச்சுக்கு இடமில்லை. நேர்மையான அரசை தேர்வு செய்ததற்காக, 5 ஆண்டுகளில் டெல்லி மிகப்பெரிய மாற்றத்தை கண்டிருப்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜவை மக்கள் நம்பினர். ஏன் அவர்களுக்கு ஓட்டு போட்டோம் என இப்போது மக்கள் தவிக்கின்றனர். கல்வியில் மிகவும் பின் தங்கி உள்ளனர். கல்வி கட்டணத்தில் பகல் கொள்ளை நடக்கிறது. மின்சார கட்டணம் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இங்கு மின்சாரம் எப்போது வரும் எனும் நிலை உள்ளது. மொத்தத்தில் மோசம் பிரிவில் இருந்து அதல பாதாளத்துக்கு உத்தரப்பிரதேச நிலைமை சென்றுள்ளது. இவ்வாறு சிசோடியா கூறினார். முன்னிரவு வரை காத்திருந்தும் அமைச்சர் சித்தார்த் நாத் சிங் வருகைக்கான அறிகுறி தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: