டெல்லி கலவர வழக்கு சக கைதிகள் அடித்து துன்புறுத்துகிறார்கள்: காங்கிரஸ் மாஜி கவுன்சிலர் இஷ்ரத் புகார் வேறு சிறைக்கு மாற்ற நீதிபதி பரிந்துரை

புதுடெல்லி: சக கைதிகள் அடித்து, உதைத்து, இம்சை செய்கிறார்கள் என நீதிமன்றத்தில் வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜகான் புகார் தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு, ஆதரவு கோஷ்டி மோதலில் பிப்ரவரி மாதம் அரங்கேறிய கொடூர வன்முறை சம்பவங்களில் பங்கிருப்பதாக, காங்கிரஸ் மாஜி கவுன்சிலர் இஷ்ரத் ஜகானும் கைது செய்யப்பட்டு மண்டோலி சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமின் கோரி பலமுறை விண்ணப்பித்தும் அவருக்கு கிடைக்காமல் உள்ளது.

இந்நிலையில் குடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் அமர்வில் ஜகான் தரப்பில் செய்யப்பட்ட முறையீட்டில், சிறையில் சக கைதிகள் என்னை அடித்து, உதைத்து இம்சை செய்கிறார்கள். ஒரு மாதத்தில் இது போன்ற தாக்குதலுக்கு 2வது முறையாக உள்ளாகி இருக்கிறேன். அங்கு இருக்கவே அச்சமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஜெயிலில் சக கைதிகளால் சித்ரவதை நீடிக்கிறது எனக் கதறியிருந்தார். அந்த முறையீடு நீதிபதி அமிதாப்பால் நேற்று விசாரிக்கப்பட்டது. சக கைதிக்கு ஏற்படும் கஷ்டம் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி, சிறையில் துன்புறுத்தலும், தாக்குதலும் நடைபெறுவது உண்மையா என மண்டோலி சிறையின் துணை எஸ்.பியிடம் விசாரித்தார்.

அதற்கு அவர் ஆம் எனக் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, உடனடியாக அவரை வேறு சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். கைதிகள் துன்புறுத்துவதை எப்படி அனுமதிக்கிறீர்கள். உச்சகட்ட பீதியில் ஜகான் உள்ளார். எனவே தாமதிக்காமல் அவரை பத்திரப்படுத்தி வேறு சிறைக்கு மாற்றுங்கள். மேலும், இன்று (புதன்கிழமை) நடைபெறும் விசாரணையில் ஜகானை வீடியோ கான்பரன்சிங்கில் நான் விசாரிக்க வேண்டும். அத்துடன், இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையும் அதிகாரிகள் இன்று சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கலவர வழக்கில் கைதாகி உள்ள மற்றொரு ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாகிர் உசைன் தரப்பு வக்கீலும் அப்போது விசாரணை மன்றத்தில் இருந்தார். நீதிபதியிடம் அவர் கூறுகையில், ‘‘வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் 1,000க்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறையில் அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. தொழுகை நடத்தவும், சக கைதிகள் மறுக்கிறார்கள். கலவர வழக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தீவிரவாதி போல பார்க்கிறார்கள். சிறை காவலர்களும் கடுமையாகவே நடந்து கொள்கிறார்கள்’’, என்றார். பதிலளித்து நீதிபதி கூறுகையில், ‘‘தீர்ப்பு வெளியாகும் வரை குற்றம் சுமத்தப்பட்டு உள்ளவர் குற்றவாளி என்றே கருத வேண்டும்’’, என்றார். அதுபோல, வீடியோ கான்பரன்சிங் முறையிலும் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச சிறைத்துறை அனுமதி மறுக்கிறது’’, என ஜமியா மிலியா மாணவர் ஆசிப் இக்பால் தன்கா தரப்பு வக்கீலும் நீதிபதியிடம் முறையிட்டார். அதையடுத்து இது தொடர்பாக அடுத்த மாதம் 5ம் தேதி விசாரணை நடைபெறும் என நீதிபதி கூறினார்.

Related Stories: