மேற்குவங்கத்தில் அரசியல் ஸ்திரமின்மை புகார் மம்தாவுடன் சரத்பவார் சந்திப்பு

மும்பை: மேற்குவங்க மாநிலத்தில் அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக மத்திய பாஜக அரசு, விரோத போக்கை கடைபிடிப்பதாகவும், அரசியல் சாசன விதிகளை மீறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமீபத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்ப மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சைகள் கிளம்பின.

இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், மம்தா அரசுக்கு ஆதரவாகவும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், திமுக தலைவர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.  இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முதல்வர் மம்தா பானர்ஜியின் கரத்தை வலுப்படுத்தவும், மத்திய பாஜக அரசுக்கு எதிராக தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அவர் மேற்குவங்கம் செல்ல உள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசு தனது அதிகாரங்களை தவறாகப்  பயன்படுத்தி, மேற்குவங்க மாநில அரசின் செயல்பாடுகளில் அத்துமீறி தலையிடுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜியிடம், சரத் பவார் பேசியுள்ளார். அவர் டெல்லியில் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்தித்து  ஆலோசனை நடத்த உள்ளார். விரைவில் அவர் மேற்குவங்கத்திற்கு சென்று மம்தாவை சந்திப்பார்’ என்றார்.

Related Stories: