தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறக்க அடிமை அதிமுக அரசுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்: கடலூர் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கடலூர்: தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறக்க அடிமை அதிமுக அரசுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று கடலூர் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக இளைஞர் அணி ெசயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ பிரசார பயணம் மேற்கொண்டார். இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் நேற்று தனது 2ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கடலூர் மஞ்சக்குப்பத்தில் அவர் திறந்த வேனில் நின்றபடி பேசுகையில், பத்து நாட்கள் டெல்டா பகுதியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பிரசாரத்தை கடலூரில் தொடங்கி உள்ளேன். மக்களின் எழுச்சியான வரவேற்பு திமுகவின் வெற்றிக்கு வழிகாட்டுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காணப்பட்ட எழுச்சி மீண்டும் மக்களிடையே காணப்படுவதால் திமுகவின் வெற்றி உறுதியாகி விட்டது.

 நிவர், புரெவி புயல் என தொடர் புயல் தாக்கத்தில் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதலில் வந்து மக்களுக்காக குரல் கொடுத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். அப்போது சென்னையில் தூங்கிக்கொண்டிருந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே ஒரு எம்எல்ஏ, தொகுதி அலுவலகம் பக்கமே வராமல் இருந்தார் என்றால் அவர் கடலூர் தொகுதி எம்எல்ஏவும், தொழில் துறை அமைச்சருமான சம்பத் தான்.  ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு பல ஆயிரம் கோடிக்கு தமிழகத்திற்கு முதலீடுகள் வந்துள்ளதாக தொழில்முனைவோர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குரிய அறிகுறிகள் இல்லை. இதுகுறித்த வெள்ளை அறிக்கை கேட்டபோதும் இதுவரை கிடைக்கவில்லை. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இதுவரை அதிமுகவினருக்கே தெரியவில்லை. அவரது சாவில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் ஓபிஎஸ்.

ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் இதுவரை அதற்கான விடை கிடைக்காமல் புரியாத புதிராகவே உள்ளது. ஜெயலலிதா இறப்பு குறித்து நடத்திய விசாரணை கமிஷனில் ஆஜராகும்படி ஓபிஎஸ்சை அழைத்தபோதும் அவர் ஆஜராகவில்லை.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் அந்த கூட்டணியின் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடலூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியின் போது பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் அத்திட்டம் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒரு விடிவுகாலம் பிறக்க வேண்டும். இதற்காக அடிமை அதிமுக அரசுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: