படத்தில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ சோனு சூட்க்கு கோயில் கட்டிய ஆதிவாசிகள்: தெலங்கானாவில் நெகிழ்ச்சி

ஸ்ரீகாளஹஸ்தி: தெலங்கானா மாநிலம், சித்திப்பேட் மாவட்டத்தில் துப்பா தாண்டாவில், நடிகர் சோனு சூட்க்கு ஆதிவாசி மக்களால் கோயில் கட்டப்பட்டுள்ளது. நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி திரைப்படம் உட்பட தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். வில்லனாக நடித்து வரும் சோனு சூட் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருப்பதாக கோயில் கட்டிய ஆதிவாசி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நடிகர் சோனு சூட் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும் நிஜவாழ்வில் மக்களுக்கு உதவி செய்யும் ஹீரோவாக திகழ்கிறார். நாட்டில் கொரோனா தொற்று பரவி ஊரடங்கு அமலில் இருந்தபோது, ஆங்காங்கே இருந்த ஆயிரக்கணக்கான கூலித்ெதாழிலாளர்களை தனது சொந்த செலவில் அவர்கள் சொந்த ஊருக்கு நடிகர் சோனுசூட் அனுப்பி வைத்தார்.

மேலும், வெளிநாட்டில் உள்ளவர்களும் நாட்டிற்கு திரும்ப உதவினார். இவ்வாறு பலருக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார். உதவி என்று கேட்கும் ஏழை, எளிய மக்களுக்கு முதல் ஆளாக உதவி செய்யும் சோனு சூட்டை கடவுளுக்கு நிகராக கருதி அவருக்கு கோயில் கட்டியுள்ளோம். சோனு சூட்க்கு கோயில் கட்டியது எங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: