வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும்: அதிமுகவை வம்புக்கு இழுக்கிறார் எல்.முருகன்

பெரம்பலூர்:  தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக அதிக இடங்களை கேட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி உள்ளனர். ஆனால், அதை பாஜ தலைவர்கள் ஏற்கவில்லை. தேர்தல் சமயத்தில் பாஜ அகில இந்திய தலைமைதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அவர்கள் பேசி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் பாஜ மாநில தலைவர் முருகன் பேட்டியளித்தபோதும், முதல்வர் வேட்பாளரை பாஜ தலைமைதான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்களுக்கு முன் சேலத்தில் அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது, புதிதாக பாஜ மாநில தலைவர் பொறுப்புக்கு வந்தவருக்கு தெரியுமோ, தெரியாதோ என்று தெரியவில்லை. ஆனால், அவர்களின் தேசிய தலைவருக்கு தெரியும். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளும், வரும் சட்டமன்ற தேர்தலிலும் முழுமையாக கூட்டணியில் தொடருகிறது.

பாஜவுடன் கூட்டணி தொடரும் என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம் என்று கூறினார். இந்தநிலையில் அதிமுகவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் வகையில் மாநில பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று அரியலூர் மாவட்டம் தா.பழூரில் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும். ஆனால் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது, யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும். எனது தலைமையிலான வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி விட்டேன் என்று கூறினார்.

மேலும், பெரம்பலூர் மாவட்டம்,  குன்னத்தில் அளித்த பேட்டியில், கமல்,  ரஜினி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் கிடையாது. எங்களது கட்சிக்கு  பி டீமும் தேவையில்லை. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழக மக்கள்  அனைவருக்கும் சொந்தம்.  தேர்தல்  கூட்டணி குறித்து, அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அதன்படி முடிவு  எடுக்கப்படும் என்றார். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக பாஜ தலைவர் எல்.முருகனுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: