அயோத்தி அருகே அரசு ஒதுக்கிய இடத்தில் குடியரசு தினத்தன்று மசூதிக்கு அடிக்கல்: அறக்கட்டளை அறிவிப்பு

அயோத்தி: ‘அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக கட்டப்படும் புதிய மசூதிக்கு வருகிற குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டப்படும்,’ என அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரியதாக இருந்த இந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனவும், மசூதி இருந்த இடத்துக்கு பதிலாக வேறு பகுதியில் புதிய மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கும்படியும் கடந்தாண்டு நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.  அதேபோல், மசூதி கட்டுவதற்காக உபி மாநிலத்தில் உள்ள தானிபூர் கிராமத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் மசூதி அமைப்பதற்காக இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதன் செயலாளர் அதார் ஹூசைன் நேற்று அளித்த பேட்டியில்,  “2021ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று புதிய மசூதி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்படும். மசூதி வட்ட வடிவில் இருக்கும், 2,000 பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் கட்டப்படும். மசூதியின் மாதிரி வரைப்படம் சனியன்று வெளியிடப்படும். பாபர் மசூதியை விட இந்த மசூதி பெரியதாக இருக்கும். வளாகத்தின் மையத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் கட்டப்படும். மசூதி கான்கிரீட் கட்டமைப்பாக இருக்காது. மசூதியின் கட்டிட கலைக்கு ஒத்ததாக இருக்கும்,’’ என்றார்.

Related Stories: