டெல்லியை நடுங்க வைத்த பனிக்காற்று: மேலும் 2 நாள் நீடிக்கும்

புதுடெல்லி: டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பனிக்காற்று வீசுகிறது. இதனால் நகரில் இயல்பு வெப்பநிலை குறைந்து போய் உள்ளது. இமயமலை பகுதியில் இருந்து வீசும் காற்று டெல்லியை எட்டியதால் இந்த குளிர் சூழல் ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. டெல்லியில் நேற்று குறைந்தபட்சமாக 5.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அதிகபட்சமாக 18.6 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானது. அடர் பனி காரணமாக பார்வை திறன் 100 மீட்டராக குறைந்தது. நேற்று காலை பாலம் பகுதியில் பார்வைதிறன் மிகவும் குறைந்தது. இதனால் வாகனங்களில் முகப்பு விளக்கு எரியவிடப்பட்டது.

நாளை வரை இதே சூழல் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் குல்திப் ஸ்ரீவஸ்தவா கூறும்போது,’ மேற்கு இமயமலை பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பனிக்காற்று டெல்லி முழுவதும் வீசி வருகிறது. எனவே வெப்ப அளவு குறைந்து விட்டது. இதே பனிக்காற்று மற்றும் நாள் முழுவதும் பனிபடர்ந்த சூழல் டெல்லியில் நாளை வரை நீடிக்கும்’ என்றார். பனிக்காற்று வீசினாலும் ஒரு பக்கம் காற்று தரம் மோசம் பிரிவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: