ஐசிசி டெஸ்ட் தரவரிசை 2வது இடத்துக்கு முன்னேறினார் விராத் கோஹ்லி

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமான பின்னர் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிராக நடந்த தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி இதுவரை 360 புள்ளிகளைக் குவித்து தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அடுத்து பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ள நிலையில், ஐசிசி நேற்று வெளியிட்ட பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ஒரு இடம் முன்னேறி 886 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸி. வீரர் ஸ்டீவன் ஸ்மித் (911) முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் (877) 3வது இடத்துக்கு பின்தங்கினார். இந்தியாவின் செதேஷ்வர் புஜாரா (766) 7வது இடத்திலும், ரகானே (726) 10வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சு தரவரிசையில், ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் (904) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா 8வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 10வது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (446) முன்னிலை வகிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 6வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories: