சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிக்கலாமா? சென்னையில் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை: மாவட்ட செயலாளர்கள் ஆவேச பேச்சு : ஜனவரியில் முடிவை அறிவிப்பதாக தகவல்

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிக்கலாமா என்பது குறித்து விஜயகாந்த் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு அதிமுகவினர் முழு அளவில் இறங்கி பிரசாரம் செய்யாதது தான் காரணம் என்று தேமுதிக தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. தொடர்ந்து வர உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரி மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம் என்று கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாக பேட்டி அளித்து வந்தார். மேலும் தேமுதிகவுக்கு உரிய மரியாதையை அதிமுக கொடுக்கவில்லை என்றும் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கும் என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் எழுந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் 67 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை ேதர்தல் தொடர்பாக கட்சியினருடன் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டப்பேரவை அப்போது மாவட்ட செயலாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக தான் உள்ளது. ஆனால், கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அதிமுக, தேமுதிகவை மதிப்பதில்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக தமிழகத்தில் செல்வாக்கே இல்லாத பாஜவை தான் அதிமுக மதிக்கிறது. அவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கூட்டணி தொடர்பாக அவர்களிடம் தான் முதலில் அதிமுக பேசியுள்ளது. தேமுதிகவை ஒரு பொருட்டாக கருதவில்லை.

அதே நேரத்தில் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் மற்றவர்களை விட அதிமுகவிடம் அதிக தொகுதிகளை பெற வேண்டும். கேட்கும் தொகுதியை கொடுக்காத பட்சத்தில் தனித்து போட்டியிட்டு நாம் யார் என்பதை அதிமுகவுக்கு காட்ட வேண்டும் என்றும் தங்களுடைய ஆதங்கத்தை அப்போது வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசுகையில், “ தேமுதிக கட்சி நிர்வாகிகள் எல்லா தொகுதிக்கும்  சென்று மக்கள் பணியாற்ற வேண்டும். தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? கூட்டணியா அல்லது தனித்து போட்டியா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. அடுத்த மாதம் நடக்கும் தேமுதிக செயற்குழு, பொதுக்குழு  கூட்டத்தில் தேர்தல் நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார். வரவிருக்கும் தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் மகத்தான வெற்றி நிச்சயம் நமக்கு கிடைக்கும். விஜயகாந்த் பிரசாரத்துக்கு வரமாட்டாரோ என்று கவலை கொள்ள வேண்டாம். தேர்தல் கிளைமாக்சில் விஜயகாந்த் பிரசாரத்தை மேற்கொள்வார். நிச்சயம் மார்ச், ஏப்ரலில் விஜயகாந்தின் பிரசாரம் இருக்கும்” என்றார்.

Related Stories: