ஆன்லைன் காலத்திலும் அவதியோ அவதி நூற்றுக்கணக்கான இ-சேவை மையங்கள் மூடல்: சான்றிதழுக்கு அலையும் விருதுநகர் மாவட்ட மக்கள்; தனியாரிடம் பணத்தை இழந்து பரிதவிக்கும் அவலம்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இ-சேவை மையங்கள் மூடிக் கிடக்கின்றன. இவை பாழடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன. இதனால் சான்றிதழுக்காக விருதுநகர் மாவட்ட மக்கள் அலைந்து திரிந்து வருகின்றனர். தனியாரிடம் பெரும் தொகையை இழந்து தவிக்கின்றனர். இணையதள வசதி இந்த காலத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. அலைந்து, திரிந்து, மணிக்கணக்கில் காத்திருந்த பெற்ற பல விஷயங்கள், இன்று குறுகிய காலத்தில் பெறும் அளவுக்கு மொபைல், கம்ப்யூட்டர் வழி இணையதளங்கள், நம் நாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசு துறைகளை பொறுத்தவரை, அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்து, சான்றிதழ்கள் பெற்ற நிலையை மாற்றி, ஆன்லைன் மூலம் பெறும் வகையில், அரசு மின் ஆளுமைத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்படி இன்றைக்கு இ-சேவை மையங்கள் மக்களின் ஒரு அங்கமாகவே உள்ளன.

* இணையத்தில் சான்றிதழ்...

முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவையர் உள்ளிட்டோருக்கான சான்றிதழ்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, தொழிலாளர் நலவாரிய சான்றுகள், சாதி, இருப்பிட சான்றுகள், ரேஷன், ஆதார் கார்டுகள், வருமானச்சான்று, திருமண நிதி,  கல்வி உதவி தொகை, விவசாயிகளுக்கான அடங்கல் துவங்கி உதவித்தொகைகள் வரை இணைய இணைப்பு மூலமே பெறப்படுகிறது. இத்தோடு, மின்வாரிய அலுவலகங்களில் இணைப்புக்களை பெற, பெயர் மாற்றம் செய்ய, வீடு, நிலம் பட்டா, சிட்டா,  வாங்க இன்னும் இதுபோன்று பல்வேறு துறைகளின் பணிகளுக்கும் சான்றிதழ் பெற இணைய வழி துணை தேவை இருக்கிறது. இப்போதும், அரசின் அறிவிப்பு எது வந்தாலும், அத்தனையும் கணினி மையத்தின் மூலமாகவே பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

* இ-சேவை மையம் மூலம்...

தமிழகத்தில் இதற்கென துவக்கப்பட்டதே இ-சேவை மையங்கள். சான்றிதழ்கள் வழங்குவதற்கான இம்மையங்கள் முதல்கட்டமாக கலெக்டர், தாசில்தார், நகராட்சி அலுவலகங்களில் திறக்கப்பட்டன. தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், ஒன்றிய அலுவலகங்களுக்கும் விரிவடைந்தது. இச்சான்றிதழ்களை கிராம மக்களும் பெறும் வகையில், கிராம சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன, இதன்படி, 2013-14ல் ரூ.13 லட்சம் முதல் ரூ.16  லட்சம் வரை இதற்கான தனிக் கட்டிடங்கள் தமிழகத்தின் அனைத்து பஞ்சாயத்துகளிலும் கட்டப்பட்டன.

* சமூக விரோதிகளின் புகலிடம்...

அரசுக்கு செலுத்தும் வரிகளுடன், பல்வேறு  சான்றிதழ்களையும் பெற இது வசதி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை கிராம  மக்களுக்கு தரப்பட்டது. ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் இந்த கட்டிடங்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. பல்வேறு இடங்களை சுற்றி முட்புதர்கள்  தோன்றி, விஷப்பூச்சிகளின் வசிப்பிடமாக மாறிப்போயிருக்கிறது. கிராம  ஊராட்சிகளில் அமைந்துள்ள இந்த இ-சேவை மைய கட்டிடங்களின் பூட்டுகளை உடைத்து,  சமூகவிரோதிகள் தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டுள்ளனர்.

* மக்களின் வரிப்பணம் வீண்...

இக்கட்டிடங்களால் பொதுமக்களின் பல லட்சம் ரூபாய் வரிப்பணம் பாழாகிப் போயிருக்கிறது. பயிற்சி பெற்ற பணியாளர்கள், கணிப்பொறிகள் இல்லையெனக்கூறி இதனை மூடியே வைத்திருக்கின்றனர். இணைய வழி பணிகளுக்கு மாவட்டத்தின் அனைத்து கிராம மக்களும் திரும்பவும் அரசு அலுவலகங்களையே தேடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நகர் மக்கள் சான்றிதழ்களை பெற தங்கள் பகுதி இ-சேவை மையங்களுக்கு செல்கின்றனர். ஆனாலோ கிராமப்பகுதிகளில் வாழும் மக்கள் தங்களுக்கான சான்றிதழ்களை, சலுகைகளை பெற பெரும் அவதியடைகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூரில் மட்டும் 29 ஊராட்சிகள் உள்ளன. ஒரு ஊராட்சிக்கு ஒரு மையம் என இங்கு 29 இசேவை மையங்களுமே பூட்டிக்கிடக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சி மையங்களில், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் பாழடைந்து, வீணடைந்து வருகின்றன. பொதுமக்கள் நகர்ப்புறங்களுக்கு பெரும் தொகை செலவிட்டு சென்று அங்குள்ள  அரசு மையத்தில் காத்திருந்து விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. தனியார்  மையங்கள் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் கிராம பொதுமக்கள்,  மாணவர்கள் தவியாய் தவித்து வருகின்றனர். உடனடியாக மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள இ-சேவை மையங்களில் பணியாளர்களை நியமித்து, கிராம மக்களின் துயரை அரசு துடைத்திட வேண்டும்.

‘ஆளும் அரசுக்கு அக்கறை இல்லை’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சசிகுமார் கூறுகையில், ‘‘பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் தினந்தோறும் கிராமங்களில் இருந்து நகர்ப்புறத்தை நாடிச் சென்று அவதிப்பட்டு வருகின்றனர். நேர விரயத்துடன், அதிக பணமும் செலவழிக்கின்றனர். பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களை அரசு பாழ்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? ஒவ்வொரு ஊராட்சியிலும் கட்டப்பட்ட இ-சேவை மையம் செயல்பட்டால், அந்த கிராமத்து மக்கள் பயனடைவர். தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்வர். ஆளும் அரசு இதுபற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது’’ என்றார்.

* ‘முப்பது ரூபாய்ல முடிவது மூவாயிரம் வரை காலியாகுது’

சமூக ஆர்வலர் ஜோதிலட்சுமி கூறுகையில், ‘‘இ-சேவை மைய கட்டிடத்தை கட்டி என்ன பயன்? ஆட்கள், கருவிகள் இல்லை. மக்களுக்காகத்தானே அரசு. நாங்கள் முப்பது ரூபாய் செலவில் வாங்க வேண்டிய சான்றிதழுக்கு, மூவாயிரம் வரையிலும் செலவிட வேண்டி இருக்கிறது. இதில் புரோக்கர்கள் அதிகரித்துள்ளனர். இவர்கள் எங்களிடமிருந்து ஒரு பெரும் தொகையை ஏமாற்றி பறித்து விடுகின்றனர்’’ என்றார்.

* கட்டிடம் இருக்கு... கம்ப்யூட்டர் இல்லையே...

மாவட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கட்டிடங்கள் இருந்தும் இ-சேவை மையங்களுக்கான கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள், உரிய பயிற்சி பெற்ற ஆட்கள் இல்லை. மாவட்ட நிர்வாகம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும்  எந்த நடவடிக்கைகளும் இல்லை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த மக்கள் திட்டத்தை குறையின்றி நிறைவேற்றுவதற்கான பணிகளை வேகப்படுத்துவது அவசியம்’’ என்றார்.

Related Stories: