வேளாண் சட்டத்தை ஆதரித்த அதிமுகவுக்கு வாக்குரிமை மூலம் விவசாயிகள் தண்டனை கொடுப்பார்கள்:திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை

சென்னை: “வேளாண் சட்டத்தை ஆதரித்த அதிமுகவிற்கு விவசாயிகள் வாக்குரிமை மூலம் நிச்சயம் தண்டனை கொடுப்பார்கள்” என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் “வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும்” என்று அறிவித்த வாக்குறுதி கார்ப்பரேட்டுகளும்-விவசாயிகளும் “ஒப்பந்த விவசாயம்” செய்து கொள்வதற்காக அல்ல. அந்த அடிப்படை கூடத் தெரியாமல் ஒரு முதல்வர் பேசியிருப்பது யாரோ சிலரின் “எடுப்பார் கைப்பிள்ளையாக” எப்படி  எடப்பாடி பழனிச்சாமி மாறி விட்டார் என்பதைக் காட்டுகிறது.

ஒழுங்காக திமுக தேர்தல் அறிக்கையை அவர் படித்திருந்தால், தனது துரோகத்தை மறைக்க, திமுக தேர்தல் அறிக்கையின் ஆதரவைத் தேடியிருக்க மாட்டார். ஏனென்றால் அவர் ஆதரிக்கும் “ஒப்பந்த விவசாயம்” பற்றிய வார்த்தையே திமுக தேர்தல் அறிக்கையில் இல்லை. அதிமுக ஆதரித்த மூன்று வேளாண் சட்டங்களிலும் விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் அடிமைப்படுத்தும் “ஒப்பந்த விவசாயம்” திணிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையும் மறுக்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய பாஜக அரசும்-அதிமுக அரசும் துடிக்கிறது. இந்த மாதிரி விவசாய விரோத செயல்பாடுகள், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கனவிலும் எதிர்பார்க்க முடியாதவை.

தனது ஊழல் முறைகேடுகள் குறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவற்றின் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்து-இன்றைக்கு தமிழகம் மட்டுமின்றி நாடே கொந்தளித்துப் போராட அடிப்படைக் காரணமாக இருந்து விட்டு-இப்போதும் இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நீட்டி முழக்கிப் பேசி வரும் ஒரே முதல்வர் இந்தியாவிலேயே பழனிசாமி ஒருவர் தான். அதற்கு தக்க தண்டனையை, தேர்தல் நேரத்தில் தங்களின் வாக்குரிமையின் மூலம் தமிழக விவசாயிகள் நிச்சயம் கொடுப்பார்கள்; அதிலிருந்து அதிமுக தப்ப முடியாது. இச்சட்டங்களைக் கொண்டு வந்த பாஜகவையும் விவசாயப் பெருமக்கள் மறந்துவிட மாட்டார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: