அம்பத்தூர் அருகே மாயமான ரவுடி அடித்துக்கொலை?

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த மங்களபுரம் குள்ளன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்(29).  பிரபல ரவுடி.  நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் மீண்டும் நேற்று காலை வரையிலும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் சதீஷை பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து சதீஷின் தாய் கலைச்செல்வி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில்  ரவுடி சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஐ.டி.ஐ பின்புறம் மது அருந்தி உள்ளார். அந்த இடத்தில் ரத்தம் சிதறி கிடக்கிறது. இதனையடுத்து, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதனால், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சதீஷ் மற்றும் நண்பர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, போலீசார் அப்பகுதி  முழுவதும் மூவரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் அதே பகுதியில் உள்ள குட்டையில் ஏதேனும் சடலம் உள்ளதா  எனவும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சதீஷூம் அவரது நண்பர்களும் கிடைக்காதவரை எந்த தகவலையும் உறுதி செய்ய முடியாது என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: