பசுமையை வரவேற்க பட்டுக்கம்பளம் விரிக்கும் துபாய்!: 15 கோடி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள மலர் பூங்கா...பார்வையாளர்களை ஈர்க்கும் மிதக்கும் இளம்பெண்..!!

அரப்: பாலைவனம் என்றாலே நினைவுக்கு வரும் அரபு நாடுகளில் பசுமையை வரவேற்க பட்டுக்கம்பளம் விரித்துள்ளது துபாய். முழுக்க முழுக்க உள்ளூரிலேயே சாகுபடி செய்யப்படும் மலர்களை கொண்டு உருவாகியுள்ள பூந்தோட்டத்தை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் துபாய்க்கு படையெடுக்க தொடங்கியுள்ளார்கள். வண்ணமயமான மலர்கள், விதவிதமான செடிகொடிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கார்ட்டூர் கதாபாத்திரங்கள், இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பது தான் மிராக்கிள் கார்டன். துபாய் நகரின் மையத்தில் 72 ஆயிரம் சதுர அடி பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் தோட்டத்தில் ஆண்டுதோறும் புதுமைகள் அரங்கேற தவறுவதில்லை. ஏரியல் புரோட்டிக் லேடி என்று பூக்களால் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்ணின் உருவம் காண்போரை வசீகரிக்கிறது.

உலகின் மிகப்பெரிய மலர் பூங்காவாக கருதப்படும் மிராக்கிள் கார்டன், தொடர்ந்து 9வது ஆண்டாக பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை வசீகரிக்க 120 வகைகளில் 15 கோடி பூக்கள் இங்கு மலர்ந்திருக்கின்றன. தோட்டத்தின் நடுவே வண்ண மலர்களால் போர்த்தப்பட்டு காட்சியளிக்கும் விமானம், வெளிநாட்டினரை வியப்பில் ஆழ்த்துகிறது. 15 அடி உயரத்திற்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள யானை மற்றும் பூனைகளை குழந்தைகள் கொண்டாட தவறுவதில்லை. மலர் பூங்கா குறித்து அங்குள்ள சுற்றுலாப்பயணி ஒருவர் தெரிவித்ததாவது, மலர்களின் நிறங்கள் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. அனைத்து மலர்களும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது உங்களை நிச்சயம் மகிழ்ச்சியடைய செய்யும் என்று குறிப்பிட்டார்.

பூக்களை பார்க்க பார்க்க யாருக்கும் சலிக்காது. இதையும் மீறி சலிப்பு ஏற்பட்டால் இருக்கவே இருக்கிறது வண்ணத்துப்பூச்சி பூங்கா. மிராக்கள் கார்டனில் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு உள்ளே சென்றால் போதும். இனிமையான ரீங்காரம் செவிகளுக்கு தேனாய் இனிக்கும். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாச ஸ்தலங்களில் மலர் கண்காட்சியும், தோட்டக்கலை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம் தான். ஆனால் துபாய் போன்ற நாடுகளில் ஆண்டுதோறும் வண்ணமயமான மலர்களுடன் இப்பூங்கா திறக்கப்படுவது பசுமை மீது அரேபியர்களுக்கான ஆர்வத்தை காட்டுகிறது.

Related Stories: