மாணவர்களே இல்லாத பள்ளிகளில் பயிற்சிக்கு வந்த பி.எட் மாணவர்கள்

சேலம்: கடந்த சில நாட்களாக, ஆசிரியர் பயிற்சி மேற்கொள்வதாக கூறி, பிஎட் மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். பள்ளிகளை திறக்காமல், மாணவர்களே வராத நிலையில், ஆசிரியர்களை எவ்வாறு பயிற்சிக்கு அனுமதிப்பது என தெரியாமல் தலைமை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். அதேசமயம், அவர்கள் பயிற்சி மேற்கொண்டதாக கையெழுத்திட அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த இரு நாட்களாக பிஎட் மாணவர்கள், ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 4 முதல் 10 பேர் வரை  வந்து சேருகின்றனர். தாங்கள், அரசுப்பள்ளியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான அனுமதி கடிதத்தையும் அளிக்கின்றனர். பள்ளிகள் திறக்காமல், மாணவர்களே இல்லாத நிலையில் யாரை வைத்து அவர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியும். அவர்களுக்கு தெரிந்த ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மூலமாக தொடர்பு கொண்டு, அழுத்தம் கொடுக்கின்றனர். இதுபோன்ற அழுத்தம் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: