தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு தீவிரம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப். 19ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வைப்பறை மற்றும் வளாகத்தின் உள்பக்கம், வெளிப்பக்கம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 243 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி மற்றும் அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அவர் ஆலோசனை வழங்கினார்.

இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 6 இடங்களில் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறையிலும் 14 மேஜைகள் போடப்படுகின்றன.தூத்துக்குடி, கோவில்பட்டி தொகுதி வாக்குகள் 22 சுற்றுகளாகவும், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், வைகுண்டம், திருச்செந்தூர் தொகுதி வாக்குகள் 19 சுற்றுகளாகவும் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் என 3 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக மொத்தம் 349 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முடிவடைந்து உள்ளது. வரும் 1ம் தேதி தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா தூத்துக்குடிக்கு வருகிறார். அதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான அடுத்தக்கட்ட பயிற்சி வகுப்பு நடக்கிறது. வாக்கு எண்ணும் பணியின் போது மேற்பார்வையாளர், நுண்பார்வையாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் பயன்படுத்தும் பல்வேறு படிவங்கள் அச்சிடப்பட்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளன.

மேலும், வாக்கு எண்ணும் பணிக்கு தேவையான பொருட்களும் வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 5 வி.வி.பேட் கருவிகளை ரேண்டம் முறையில் தேர்வு செய்து, அதில் பதிவான வாக்குகளை எண்ணி சரிபார்க்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மருத்துவ குழுவும் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.சுமார் 45 நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு வரும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முடிவிற்காக காத்துள்ளனர்.

The post தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: