ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள்

*சமூக வலைதளங்களில் வெளியீடு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டவண்ணம் உள்ளனர். மேலும் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி, சொட்டை கவுண்டர் பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த வாரம் பெரிய சத்தத்துடன் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது.

இதனால் அந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் நெருப்பு மற்றும் சாம்பல் போல் மண் காணப்பட்டது. மேலும் பள்ளத்தில் இருந்து அனல் வீசியது. தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பள்ளத்தில் இருந்த மண் மாதிரிகளை எடுத்து ஆலங்காயம் அடுத்த காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் லெனின் தமிழ்கோவன் உத்தரவின்படி, நேற்று முன்தினம் மாலை வேலூரில் உள்ள கலைஞர் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையத்தின் மாவட்ட அறிவியல் அலுவலர் (பொறுப்பு) ரவிக்குமார் அங்கு வந்து 5 அடி பள்ளத்திலிருந்து மண் மற்றும் சாம்பல் மாதிரிகளை சேகரித்தார். சென்னைக்கு அந்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், வானில் செவ்வாய் அல்லது வியாழன் கோள்களுக்கு அருகில் இருந்து எரிகல் விழுந்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று காலை முதல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எரிகல் விழுந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். அவர்கள் அந்த இடத்தை புகைப்படம் எடுத்தும், அங்கிருந்தபடி செல்பி எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதைப்பார்த்து பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரத்தொடங்கி உள்ளனர். இதனால் எரிக்கல் விழுந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

The post ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: