மானூரில் மின் கசிவால் இசேவை மையம், ஓட்டல், பழக்கடையில் தீவிபத்து

*ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

மானூர் : மானூர் பஜாரில் மின் கசிவு காரணமாக இ-சேவை மையம், பழக்கடை மற்றும் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தலா ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி உள்ளது.நெல்லை மாவட்டம் மானூர் பஜாரிலுள்ள ஒன்றிய அலுவலகம் எதிரில் நெல்லையப்பர் கோயில் சார்ந்த இடத்தில் கடைகள் வாடகைக்கு செயல்பட்டு வருகின்றன. இதில் மானூரைச் சேர்ந்த வேல்முருகன் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவரது ஓட்டலுக்கு அருகில் மேல பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த ஜெயஜோதி (32) என்பவர் இ சேவை மையம், ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் அருகில் மானூர் மாவடியைச் சேர்ந்த முத்து என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் மூன்று பேரின் கடைகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் வழக்கம் போல் கடையை பூட்டு விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் இந்த மூன்று கடைகளிலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக கடைகளில் தீப்பிடித்து அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவி எரிந்து கொண்டிருந்தது.

அடுத்து 4வது சுவீட் கடையில் இரவு பணியில் இருந்த இரு பணியாளர்களுக்கு தீ வாசனை வந்தவுடன் வெளியில் வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் சத்தமிட்டு அழைத்துள்ளனர். உடனடியாக மானூர் காவல் நிலையம் மற்றும் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் இந்த மூன்று கடைகளிலும் தலா 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழக்கடை உரிமையாளர் தனக்கு வந்த சீட்டு பணம் ரூ.2 லட்சத்தை கடைக்குள் வைத்திருந்ததாகவும், அதுவும் தீயில் எரிந்துவிட்டதாக தெரிவித்தார்.

The post மானூரில் மின் கசிவால் இசேவை மையம், ஓட்டல், பழக்கடையில் தீவிபத்து appeared first on Dinakaran.

Related Stories: