வயல்களில் கோடை மழையை நம்பி ஆட்டுக்கிடை போட்ட விவசாய குடும்பத்தினர்

*ராமநாதபுரத்தில் இருந்து வந்து நாகப்பட்டினத்தில் முகாம்

நாகப்பட்டினம் : கோடை மழையை நம்பி 100க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து நாகப்பட்டினத்தில் ஆட்டுகிடை போட்டுள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில மாதங்களாக அதிகமாக இருந்தது. இதனால் நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் கோடை வெயிலின் கொடுமை குறைய வேண்டும் என புலம்பி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. வருணபகவான் ஆசியுடன் காய்ந்து போன புற்கள் ஓரளவு வளர்ந்தது. இதனால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்தனர். குளம், குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரை கால்நடைகள் பருக தொடங்கியது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஆட்டுகிடை போடுபவர்கள் குடும்பத்தோடு வந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை, வலிவலம், இறையான்குடி, சிங்கமங்கலம், கிள்ளுக்குடி, கடலாடிகுடி, அய்யடிமங்கலம், கீரங்குடி, சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வயல்களில் குடில் அமைத்து தங்கியுள்ளனர். அருகிலேயே ஆட்டுக்கிடை அமைத்து தங்களது ஆடுகளை பாதுகாத்து வருகின்றனர். பகல் நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலை விட்ட பின்னர் மாலை பொழுதில் ஆடுகளை மீண்டும் தங்களது குடிலுக்கு அழைத்து வந்து பாதுகாப்புடன் வைத்துகொள்கின்றனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்டம் காளையார்கோயில் பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி நிறைந்த பகுதி ஆகும். எங்களது முக்கிய தொழில் ஆடு வளர்ப்பது தான். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் ஆட்டுகிடை போடுவதற்காக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு செல்வோம்.
இந்த ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் வந்துள்ளோம்.

இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் காளையார்கோயில் பகுதியில் இருந்து ஆட்டுக்கிடை போட வந்துள்ளோம். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தோம். அப்பொழுது எல்லாம் எங்களது ஆடுகளுக்கு தீனி கூட கிடைக்காமல் கடுமையாக வறட்சியாக இருந்தது. இதனால் ஆடுகளை வேறு மாவட்டத்திற்கு எடுத்து செல்ல திட்டமிட்டோம்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடை மழை பெய்தது. இந்த மழையால் புல் நன்றாக வளர்ந்துள்ளது. குளம், குட்டைகளில் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ஆடுகளுக்கு ஓரளவு நல்ல மேய்ச்சல் உள்ளது. விவசாயிகள் இது போல் ஆடுக்கிடை போட விரும்புகின்றனர். வயல்களில் பட்டிப்போட்டு ஆடுகள் இருப்பதால் வயல்களுக்கு இயற்கை உரம் கிடைப்பதால் நல்ல மகசூல் கிடைக்கும். 300 ஆடுகள் இருந்தால் நாள் ஒன்றுக்கு ரூ.300 வயல் உரிமையாளர்கள் கொடுத்து விடுகின்றனர். இன்னும் 3 மாத காலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருப்போம். இதன்பின்னர் எங்கள் ஊருக்கு ஆடுகளை அழைத்து சென்று விடுவோம் என்றார்.

The post வயல்களில் கோடை மழையை நம்பி ஆட்டுக்கிடை போட்ட விவசாய குடும்பத்தினர் appeared first on Dinakaran.

Related Stories: