துணி உலர்த்தச் சென்றபோது ‘ஷாக்’: பெண்ணை காப்பாற்ற சென்ற வியாபாரி சாவு

பெரியகுளம்: பெரியகுளத்தில் துணி உலர்த்த சென்றபோது பெண்ணை மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற சென்ற இருவர் மீது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்; மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, கீழவடகரை ஊராட்சி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முருகலட்சுமி. இவர், வீடு அருகே கட்டியிருந்த கம்பி மீது நேற்று துணிகளை உலர்த்த போட்டார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதைப் பார்த்த அருகில் பெட்டிக்கடை நடத்தி வரும் முகமது யாசின் என்ற வாலிபர், அவரை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அருகே இருந்த வேல்முருகன் என்ற இளைஞர் இருவரையும் காப்பாற்ற முயன்றார். இவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

மூவரும் படுகாயம் அடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மின்சாரம் தாக்கியதில் முகமது யாசின் இறந்ததாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘முகமது யாசின் வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டுக்கு தற்காலிக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் கட்டிய கம்பியில் துணி உலர்த்த சென்றபோது, பெண் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. அவரை காப்பாற்ற சென்றபோது மேலும் இருவருக்கு மின்சாரம் பாய்ந்துள்ளது’’ என்றனர்.

Related Stories: