வலையில் சிக்கிய திமிங்கல சுறாவுக்கு உயிர் கொடுத்த 60 நல்லவர்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால், திருவனந்தபுரத்தின் சங்குமுகம் கடற்கரை அருகிலேயே சில மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர், அப்போது, ஒரு மீனவரின் வலையில் பிரமாண்ட மீன் ஒன்று சிக்கியது. அருகில் இருந்த பல மீனவர்கள் ஒன்று சேர்ந்து வலையை இழுத்தனர். அப்போதும் முடியாததால் 60 மீனவர்கள் அங்கே திரண்டு வந்தனர். அனைவரும் ஒன்றுகூடி கரைக்கு வலையை இழுத்து வந்தனர். அது, ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கல சுறா. இந்த சுறா வகை அருகி வரும் இனம் என்பதால், அதை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பிடிபட்ட அந்த சுறாவை கடலுக்குள் விடுவதற்கு மீனவர்கள் முயன்றனர். இந்த முயற்சி 2 முறை தோற்றது. பின்னர், 60 பேரும் ஒன்று சேர்ந்து செய்த முயற்சியால் கடலுக்குள் அது இழுத்துச் செல்லப்பட்டு, விடப்பட்டது. அப்போது சிறிது நேரம் மயங்கி கிடந்த அந்த சுறா, மீண்டும் உற்சாகத்துடன் நீந்தி, வேகமாக கடலுக்குள் சென்று மறைந்தது. மீனவர்களின் இந்த செயலை அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: