வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்: மதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தீர்மானம்

சென்னை: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுக உயர்நிலை குழு, மாவட்ட செயலாளர் கூட்டம் நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேச மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மத்திய பாஜ அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும். காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

* நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். மேலும், வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்துள்ள மீனவ மக்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். தமிழக ஆளுநர் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்.

* போக்குவரத்து துறை அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் விடப்பட்ட சுற்றறிக்கை , வெளிப்படையாகவே ஊழலில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும், ஊழலில் ஊறித் திளைக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: