கடற்படை பலத்தை மேலும் அதிகரிக்க 6 நீர்மூழ்கி, விமானம் தாங்கி கப்பல்களை வாங்க திட்டம்: தளபதி கரம்பீர் சிங் தகவல்

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பிற்காக கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், 6 நீர்மூழ்கி கப்பல்கள், 3வதாக ஒரு விமானம் தாங்கி கப்பல் உள்பட பல்வேறு முக்கிய தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கடற்படை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, கடந்த 1971 டிசம்பர் 4ம் தேதி, கராச்சி துறைமுகத்தில் இருந்த 4 போர் கப்பல்களை இந்திய கடற்படை தாக்கி அழித்ததன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கடற்படை தின செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று தளபதி கரம்பீர் சிங் தலைமையில் நடந்தது.

அப்போது அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கொரோனாவினால் மக்களின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்லைகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் வீரர்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், ஒரே நேரத்தில் கொரோனாவையும், பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகி இருக்கிறது. தற்போதைய சூழலில், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் மட்டுமே நம்மிடம் உள்ளது. 2வது விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதன் சோதனை ஓட்டம் 2021ம் ஆண்டில் நடத்தப்பட உள்ளது.

எனவே, 3வதாக ஒரு விமானம் தாங்கி கப்பல், நம் நாட்டிற்கு நிச்சயமாக தேவைப்படுகிறது. இதனை கொள்முதல் செய்வது குறித்து இன்னும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனால், அதன் பயன்பாடு குறித்து தெளிவாக இருக்கிறோம். ஏனெனில், கடற்படை, விமானப் படையின் நடவடிக்கைகள் ஒருங்கிணைந்தவை. இது தவிர, 6 நீர்மூழ்கி கப்பல்கள், 6 பி-81 கடல் கண்காணிப்பு விமானங்கள் உள்பட ஏராளமான கடற்படை சார்ந்த தளவாடங்கள் விரைவில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதன் மூலம், இந்திய பெருங்கடலில் உள்ள முக்கிய சந்திப்புகளில் நமது பலத்தை அதிகரிக்க முடியும். லடாக் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படையின் பி-81 மற்றும் ஹெரான் டிரோன்கள் கண்காணிப்பு பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: