பகுகிராம குடிநீர் திட்டத்தில் விரைவில் 247 கிராமங்களுக்கு தடையில்லா குடிநீர் கிடைக்கும்: எம்எல்ஏ நரேந்திரா தகவல்

சாம்ராஜ்நகர்: பகுகிராம குடிநீர் திட்டத்தின் கீழ் 247 கிராமங்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கும் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எம்.எல்.ஏ நரேந்திரா தெரிவித்தார். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பல கிராமங்கள் மாவட்டத்தின் வனப்பகுதியையொட்டி இருக்கும் பழங்குடியின மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களாகும். இந்த கிராமங்களில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. போர்வெல் மற்றும் கிணற்று நீரை இவர்கள் குடித்து வந்தனர். இதனால் வெயில் காலங்களில் மலைவாழ் கிராம மக்கள் தண்ணீர் தேடி அலையும் நிலை இருந்தது.  

இதன் காரணமாக, வனப்பகுதியையொட்டிய கிராம மக்கள் குடி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை குறித்து எம்.எல்.ஏ நரேந்திரா அரசுக்கு மனு அளித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்களிப்பில் செயல்படுத்தும் பகுகிராம குடிநீர் திட்டத்தின் கீழ் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் முதல்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் ஹனூர் தொகுதியில் உள்ள 247 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக எம்.எல்.ஏ நரேந்திரா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஏற்கனவே தொடங்கப்பட்ட முதல் கட்டப்பணிகள் அடுத்தாண்டுக்குள் முடிக்கப்பட்டு இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்படும் என்றார்.

Related Stories: