ரயில் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட பாமக போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை: பாமகவினர் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதனால் பாமக மற்றும் வன்னியர் சங்கம் போராட்டம் நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வராகி என்பவர், நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி, “பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்துள்ளனர். போலீசார் கொரோனா விதிகளுக்கு முரணாக இந்த போராட்டத்துக்கு எப்படி அனுமதி அளித்தனர்? பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் செயல்பட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி போராட்டத்துக்கு தூண்டியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் தொண்டர்கள் மீது மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே போராட்டத்துக்கு தூண்டிய பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி மற்றும் பாமக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று முறையிட்டார்.

இதை கேட்ட நீதிபதிகள், “மனுவாக தாக்கல் செய்யுங்கள். அது பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்றனர். இதையேற்று மனுதாரர், இதை மனுவாக தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:பாமக மற்றும் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் தொண்டர்கள் பொது சொத்துக்கு சேதம் விளைவித்துள்ளனர். ரயில் மறியலில் ஈடுபட்டதுடன் அல்லாமல், ரயில்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலைகளை வழிமறித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கு பெரும் தடை ஏற்பட்டது. பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை. சட்டம்-ஒழுங்கை உரிய முறையில் காப்பாற்ற வேண்டும் என்ற நீதிமன்றங்களின் உத்தரவை போலீசார் செயல்படுத்தவில்லை. இதன்மூலம் போராட்டத்திற்கு போலீசார் மறைமுகமாக ஒத்துழைப்பு அளித்துள்ளதாக தெரிய வருகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. அதனால் பாமக மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவை போராட்டங்கள் நடத்த தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: