தானே, ஒகி, கஜா, வர்தா, நிவர் என தமிழகத்தை தொடர்ந்து அச்சுறுத்தும் புயல்கள்: காலநிலை மாற்றமே காரணம் : சமூக நல ஆர்வலர் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தை தானே, ஒகி, கஜா, வர்தா, நிவர் என வரிசையாக புயல்கள் மிரட்டி வருகின்றன. இதற்கு ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றமே காரணம் என்று சமூக நலஆர்வலர் குற்றம்சாட்டி உள்ளார்.

தானே, ஒகி, கஜா, வர்தா வரிசையில் சமீபத்தில் கரையைக் கடந்த நிவர் என அனைத்து புயல்களாலும் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நிவர் புயலால் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. மின்சாரம் இல்லாமலும், வீடுகளில் தங்க முடியாமலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுற்றுவட்டார மாவட்டங்களில் வாழை, நெல் உள்பட பல பயிர்கள் காற்று மற்றும் மழைநீரில் மூழ்கியது. இதற்கு பருவநிலையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கூறியதாவது: தமிழகம் கடந்த ஆறு ஆண்டுகளில் தானே, ஒகி, கஜா, வர்தா, நிவர் என்று வரிசையாக புயல்களை சந்தித்து வருகிறது. தற்போது புயலின் தன்மையும் தீவிரமடைந்து வருகிறது. இதற்கு காலநிலை மாற்றமே காரணம். மனிதர்கள் வெளியிடக்கூடிய கார்பனை பெருங்கடல்கள் வாங்கிக்கொள்கிறது. அப்போது கடலின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடலின் வெப்பம் 26 டிகிரி செல்சியஸ்  இருக்கவேண்டும். ஆனால் இங்கு 29, 30 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. இது புயல் உருவாக காரணமாக உள்ளது. இதன் மூலம் காலநிலை மாற்றங்கள் மனிதர்களுக்கு மிகப்பெரிய அழிவுகளை, சவால்களை உருவாக்கி வருகின்றன. முன்பு வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடலில் தான் அதிக வெப்பம் ஏற்பட்டு வந்தது.

தற்போது அரபிக் கடலின் வெப்பமும் அதிகரித்துள்ளது. இதனால்தான் கேரளாவிலும் அதிகமாக வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு காரணம், 1,500 மி.மீ மழை ஒருவாரத்தில் பெய்தது. இது நினைத்துக்கூட பார்க்க முடியாத மழை பொழிவு. குறைந்தகால அளவில் அதிக மழை பொழிவு. புயலின் தன்மை தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது. சென்னையில் கடந்த காலத்தில் 30 பெரிய கால்வாய்கள், 548 சிறிய ஓடைகள் இருக்கும். இவையெல்லாம் எங்கு உள்ளது. நாம் அழித்துக்கொண்டு இருக்கிறோம். எனவே ஆறு, கால்வாய் உள்ளிட்ட அனைத்தையும் தூர்வார வேண்டும். மேலும் புயலால் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப்  பற்றியும் சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னையை சுற்றி ஆறுகள்

சென்னையில் நான்கு ஆறுகள் உள்ளன. இவ்வாறு உள்ள நகரம் வேறு எங்கும் இல்லை. வடசென்னைக்கு கொசஸ்தலை ஆறு, மத்திய  சென்னைக்கு கூவம் ஆறு, தென்சென்னைக்கு அடையாறு, அதற்கு கீழே சென்றால் பாலாறு, கோவளம் உள்ளது. இந்த 4 ஆறுகளையும் இணைக்கக்கூடிய கால்வாய் உள்ளது.

மாறும் புயல்களின் நிலை

ஒரு புயல் உருவாகி ஏழு நாட்களுக்குள் கரையைக் கடக்கும். ஆனால், ஃபானிக் புயல் 11 நாட்களுக்கு பின்னரே கரையைக் கடந்தது. காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானால், அது புயலாகவோ அதிதீவிர புயலாகவோ மாற நாற்பது மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், ஒகி புயல் 6 மணி நேரத்தில் உருவாகிவிட்டது.

பெரும் பாதிப்பு ஏற்படுத்திய புயல்கள்

2011    தானே

2016    வர்தா

2017    ஒகி

2018    கஜா

2020    நிவர்

Related Stories: