டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

சென்னை: விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தடையை மீறி திட்டமிட்டப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று காலை மத்திய சென்னை மாவட்ட தலைவர் செல்வா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாஸ்திரி பவன் முன்பு கூடினர்.

இதனால் சாஸ்திரி பவன் முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சாலையில் பேரணியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்றனர். இவர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்றதாக 40க்கும் மேற்பட்ேடாரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். . பின்னர்,அனைவரையும் சமுதாய நல கூடத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

Related Stories: