கொரோனா சோதனைக்கு பின்னர் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்படுகிறதா?: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா பரிசோதனைக்கு சேகரித்த மாதிரிகளையும், ஆய்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பாதுகாப்பாக அகற்றுவதற்கு என  வழிகாட்டி விதிமுறைகள் உள்ளதா என்றும், அப்படி இருந்தால் அதனை மருத்துவமனைகளும், டாக்டர்களும் தீவிரமாக கடைபிடிக்கிறார்களா என்பது  குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் வக்கீல் பங்கஜ் மேத்தா என்பவர்  தொடர்ந்த பொது நலன் வழக்கின் மனுவில் கூறியிருப்பது: தென்கிழக்கு டெல்லி  லஜ்பத் நகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கொரோனா மாதிரி ஏஜி கிட் பரிசோதனை முகாம் உள்ளது. அதிதீவிரமான தொற்று  என உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனாவின் அச்சுறுத்தல் குறித்து அங்கு பணியில் உள்ள டாக்டர் உள்பட யாருக்கும் தீவிரத்தன்மை இருப்பதாக  தெரியவில்லை. அது மட்டுமன்றி, கொரோனா சோதனை மற்றும் சிகிச்சை முடிந்த பின்னர், மருத்துவமனைகளில் இருந்து தொற்று சம்பந்தப்பட்ட  மருத்துவ கழிவுகளை அகற்றுவது எப்படி என மத்திய சுகாதார துறை வெளியிட்ட மருத்துவ மேலாண்மை வழிகாட்டி விதிமுறைகள், கலெக்டர்  அலுவலக சோதனை முகாமில் காற்றில் பறக்க விடப்பட்டு உள்ளது. முகாமைச் சுற்றி எங்கு பார்த்தாலும் சோதனைக்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகள்  சிதறிக் கிடக்கின்றன.

மேலும் சோதனைக்கு பயன்படும் ஒரு முறை பயன்பாட்டு (டிஸ்போசபிள்) உபகரணங்கள் மலை போல குவிந்து கிடக்கிறது.  அவற்றின் அருகிலேயே ஏஜி கிட் சோதனை நடத்தப்படுகிறது. பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் சிதறி காணப்படும் மாதிரிகளில் இருந்து தொற்று  பரவும் அபாயம் இருப்பதை டாக்டர் உள்பட யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை.ஏன் இப்படி அவலமாகவும், அலங்கோலமாகவும் இந்த இடம் உள்ளது என கேள்வி எழுப்பியதற்கு, இறைந்து கிடப்பது நெகட்டிவ் ரிசல்ட் வந்த  மாதிரிகள். வேண்டும் என்றால் நீங்களும் ஏஜி கிட் சோதனை செய்து கொள்ளுங்கள் என டாக்டர் அலட்சியமாக பதிலளித்தார். உயர் நீதிமன்றம்  தலையிட்டு மருத்துவ கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி என் படேல், நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர், மனுவின் சாரம்சம்  குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்தனர்.

அதையடுத்து விசாரணைக்கு அரசு தரப்பில் ஆஜராகி இருந்த நிலைக்குழு கூடுதல் ஆலோசகர் சஞ்சய் கோஷ்,  வக்கீல் நமன் ஜெயின் ஆகியோரிடம், ‘‘அதி பயங்கர தொற்று என உலகமே அஞ்சி நடுங்குகிறது. டெல்லி அரசு மட்டும் எப்படி அலட்சியமாக உள்ளது.  கொரோனா தொடர்பான அனைத்து மருத்துவ கழிவுகளையும்  அகற்றும் நடைமுறைகள் அல்லது வழிகாட்டி விதிகள் டெல்லியில் அறிமுகம்  செய்யப்பட்டதா? செய்யப்பட்டு இருந்தால் அதனை மருத்துவமனைகல், கிளினிக்குகள் மற்றும் டாக்டர்கள் தீவிரமாக கடை பிடிக்கிறார்களா என நாளை  (3ம் தேதி) நடைபெறும் விசாரணையில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்’’, என்றனர்.அப்போது அரசு ஆலோசகர் கோஷ் கூறுகையில், ‘‘மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறோம். கலெக்டர் அலுவலக கொரோனா மாதிரி  சோதனை முகாமில் அவர் பார்த்தது புதிதாக வரவழைக்கப்பட்ட சாதனங்கள் அல்லது பயன்படுத்த லாயக்கற்ற சாதனங்கள். டெல்லி மாசு கட்டுப்பாட்டு  கமிட்டி விதிமுறைகளின் படி மருத்துவ கழிவுகள் கையாளப்படுகிறது’’, என்றார்.

Related Stories: