கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது பாசிட்டிவ் சதவீதமும் 2 வாரத்தில் கட்டுப்படும்: அமைச்சர் ஜெயின் நம்பிக்கை

புதுடெல்லி: தலைநகரில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், பாசிட்டிவ் முடிவுகளும் 55  சதவீதம் குறைந்ததாகவும், அடுத்த 2 வாரத்தில் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.கொரோனா நடப்பு நிலவரம் குறித்து நிருபர்களுக்கு அமைச்சர் ஜெயின் பேட்டி அளித்தார். பேட்டியில் ஜெயின் கூறியிருப்பது: கடந்த மாதம் முதல்  வாரத்தில் பாசிட்டிவ் 15.26 சதவீதமாக அதிகரித்து இருந்தது. திங்களன்று பாசிட்டிவ் சதவீதம் 7.35 ஆக பதிவாகி உள்ளது. ஆக, பாசிட்டிவ் 55 சதவீதம்  குறைந்து உள்ளது. அடுத்த ஓரிரு வாரத்தில் பாதிப்பு, இறப்பு என கொரோனா விவகாரம் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என

நம்புகிறேன்.

திங்களன்று காணப்பட்ட பாதிப்பு எண்ணிக்கை 3,726, கடந்த 15 நாட்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கை ஆகும். இறப்பு எண்ணிக்கை 108  ஆக அதிகரித்து மீண்டும் நூறு எண்ணிக்கையை தாண்டி உள்ளது. ஞாயிறன்று மொத்தம் 50,670 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. ஏஜி கிட்  சோதனையை காட்டிலும் ஆர்டி-பிசிஆர் சோதனை அதிகமாகி இருக்கிறது.   கொரோனா மாதிரிகளை சோதனை செய்யும் ஆய்வகங்கள் முழு வீச்சில் செயல்படுகின்றன. ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவுகள் துல்லியமாக  கண்டறிய 24 மணி நேரம் ஆகிறது.

தற்போதுள்ள சோதனை விறுவிறுப்பு நடவடிக்கை காரணமாக, முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. எனினும் இது குறித்து தீவிர கவனம்  செலுத்தி வருகிறோம். ஆய்வகங்களை கட்டுப்படுத்துவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகும். இந்த விவகாரத்தில் கவுன்சில் தீர்வு கண்டால்  நன்றாக இருக்கும். இவ்வாறு ஜெயின் கூறினார்.

Related Stories: