செம்மஞ்சேரி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்: ஆய்வுக்கு பின் முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: செம்மஞ்சேரி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நிவர் புயலால் சென்னை புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, முடிச்சூர், தாம்பரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் முழுமையாகவும், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, சிறுதாவூர், கோட்டூர்புரம், மாம்பலம், புரசைவாக்கம், வியாசர்பாடி, பெரம்பூர், ஆர்.கே.நகர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழந்தது. சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

பலர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். மழை பாதித்த இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார். மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தால், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு மழைநீர் வந்தடையும். அங்கிருந்து துரைப்பாக்கம் ஒக்கியம் மடு வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கு செல்லும். பின்னர் முட்டுக்காடு படகு குழாம் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும். தற்போது, மழைநீர் தேங்காத வகையில் துரைப்பாக்கம் 200 அடி சாலையில் இருந்து கோவிலம்பாக்கம் வரை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், தற்போதைய மழையால் இப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளிக்கரணை பகுதியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பகல் 12.15 மணியளவில் ஆய்வு செய்தார். மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து துரைப்பாக்கம் ஒக்கியம் மடு, நூக்கம்பாளையம், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, முட்டுக்காடு முகத்துவார பகுதி ஆகிய பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து சோழிங்கநல்லூர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தாழ்வான இடங்களில் தேங்கும் நீரை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தேன். தாழ்வான இடங்களில் நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் தொடர் நடவடிக்கையால், வெள்ள பாதிக்கும் இடங்கள் தற்போது குறைந்துள்ளது. செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்புநிலப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும். பள்ளிக்கரணை மத்திய பகுதியில் கால்வாய் அமைத்தால் வெள்ளம் தேங்காது.

வெள்ளம் தேங்குவதை தடுக்கும் வகையில் கால்வாய் அமைக்க ரூ.550 கோடி ஒதுக்கப்படும். வடிகால் அமைத்து நேரடியாக பக்கிங்காம் கால்வாயில் மழை நீரை கொண்டு சென்றுவிட திட்டமிடப்பட்டுள்ளது. வேளச்சேரி, ராம்நகர், மடிப்பாக்கத்தில் காலியாக இருந்த இடங்களில் தற்போது குடியிருப்புகள் உள்ளன. தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.   

Related Stories: