வேளாண் சட்டங்களை எதிர்த்து 2வது நாளாக பேரணி டெல்லியில் நுழைய முயன்ற விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு

* எல்லையில் பல இடங்களில் மோதல் * இறுதியாக பணிந்தது மத்திய அரசு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 2வது நாளாக டெல்லி நோக்கி பேரணியாக சென்ற பஞ்சாப், அரியானா விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியும் விரட்டி அடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, 27, 28ம் தேதிகளில் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இதற்காக டெல்லியை நோக்கி பஞ்சாப் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் புறப்பட்டனர். அவர்களை தங்கள் மாநில எல்லையில், அரியானா போலீசார் நேற்று முன்தினம் தடுத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.

இருப்பினும், நேற்று 2வது நாளாக விவசாயிகள் தங்களின், ‘டெல்லி சலோ’ பேரணியை மீண்டும் தொடங்கினர். 2வது நாள் போராட்டம் தீவிரமடையக் கூடும் என்று, டெல்லியின் என்எச்-24, டிஎன்டி, சில்லா, திக்ரி, பகதூர்கர், பரிதாபாத், காளிந்திகன்ஜ் உள்ளிட்ட அனைத்து எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அங்கு மத்திய தொழிற்படை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அரியானா - டெல்லி எல்லையான ஷிங்கு வழியாக விவசாயிகள் நுழைய அதிக வாய்ப்புள்ளதால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். பஞ்சாப் விவசாயிகளுடன் அரியானா விவசாயிகளும் இணைந்ததால் அவர்களை தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை போலீசார் எடுத்து இருந்தனர். மணல் மூட்டைகள், தண்ணீர் நிரப்பிய வஜ்ரா வாகனங்கள், முள்வேலி தடுப்புகள் எல்லைகளில் அமைக்கப்பட்டு இருந்தன. போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன.

ஷிங்கு, திக்ரி எல்லைகளில் டிராக்டர்கள், லாரிகளில் வந்த விவசாயிகளுக்கு  அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் போலீசாரின் தடுப்புக்களை அகற்றிவிட்டு டெல்லிக்குள் நுழைய முற்பட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனர். விவசாயிகள் போலீசார் மீது கற்களை வீசி தாக்க்ினர்.  இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இறுதியில் மத்திய உள்துறை அமைச்சகம் பணிந்தது. டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் அவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி கொள்ள, போலீசார் அனுமதி அளித்தனர். இருப்பினும், எல்லையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் விவசாயிகள் மீது பலப்பிரயோகம் செய்து, விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், டெல்லி எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தலைவர்கள் கண்டனம்

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்: நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால் பதற்றத்தை தணிக்க,  விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

காங். பொது செயலாளர் பிரியங்கா: விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க, அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. டிராக்டர்களை வர விடாமல் தடுக்க சாலைகள் தோண்டப்படுகின்றன. `ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பற்றி கவலைப்படும் பிரதமர், முதலில் `ஒரே தேசம், ஒரே அணுகுமுறை’ என்பதை   அமல்படுத்தட்டும். காங். முன்னாள் தலைவர் ராகுல்: உலகில் எந்த அரசாலும் உண்மைக்காக போராடும் விவசாயிகளை தடுத்து நிறுத்த முடியாது. மோடி அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று, அந்த கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இது ஆரம்பம் மட்டுமே.

சிறையாக மாற்ற அனுமதி மறுப்பு

கைது செய்யப்படும் விவசாயிகளை சிறையில் அடைப்பதற்காக, டெல்லியில் உள்ள 9 விளையாட்டு மைதானங்களை பயன்படுத்திக் கொள்ள, டெல்லி அரசிடம் போலீசார் அனுமதி கோரினர். ஆனால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. மேலும், `இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் அமைதியான முறையில் போராட உரிமை உள்ளது,’ என்று டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறினார்.

விபத்தில் ஒருவர் பலி

விவசாயப் பேரணியில் பங்கேற்க டிராக்டரில் டெல்லி நோக்கி புறப்பட்ட பஞ்சாப் மாநிலம், மான்சாவை சேர்ந்த விவசாயி தன்னா சிங்கின் டிராக்டர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் காயமடைந்தனர்.

Related Stories: