கஜா புயலைவிட நிவர் புயல் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும்..!! மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகருகிறது; வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி

சென்னை: சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவில் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது. நாளை மாலை அதி தீவிர புயலாக நிவர் கரையை கடக்கும் என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நிவர் புயலின் நகர்வுத் தன்மை குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;  நிவர் புயலானது சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து 370 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

பல மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகருகிறது. வடக்கு-வடமேற்கு நோக்கி தற்போது நகர்ந்து வரும் நிவர் புயல், அதன்பின் வடமேற்கு திசையில் நகரும். அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும். தமிழகம், புதுவை, ஆந்திரப்பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். கடல் கொந்தளிப்பாக இருப்பதால் வழக்கத்தை விட அலைகள் 14 அடி உயரம் எழும்பும். கஜா புயலைவிட நிவர் புயல் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: