கொரோனா நிலவரம், தடுப்பூசி விநியோகம் குறித்து மாநில முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை

புதுடெல்லி: பல்வேறு மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள சூழலில், தொற்று பரவல் நிலவரம் மற்றும் தடுப்பூசி விநியோகம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்துகிறார். நாட்டில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 30ஆயிரம் முதல் 47ஆயிரம் ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா நோய்  தொற்றின் காரணமாக 44,059 பேர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது மொத்தம் 91லட்சத்தை கடந்தது. பல்வேறு மாநிலங்களில் பண்டிகை நாட்களின் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வந்ததன் காரணமாக நோய் தொற்று அதிகரித்துள்ளது. மத்தியப்பிரதேசம், குஜராத், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக சில மாநிலங்களில் மீண்டும் பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் பள்ளி மற்றும் கல்லூரி திறப்பை ஒத்திவைத்துள்ளன. இதனிடையே குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசின் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய் தொற்று அதிகமுள்ள அரியானா, டெல்லி, கேரளா, குஜராத், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகின்றார். இதில் கொரோனா காரணமாக மாநிலங்களில் தற்போது நிலவும் சூழல் மற்றும் திடீரென பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்தும், அதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரவலை கட்டுப்படுத்த  என்ன செய்துள்ளீர்கள்?

கொரோனா மீட்பு நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லி, ராஜஸ்தான் மாநிலம் ஆகியவைகளை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. டிசம்பரில் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அதனால் இந்த விவகாரத்தில் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ள மாநில அரசுகள் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும். மேலும் கொரோனா பாதுகாப்பில் தற்போது வரை என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கால திட்டம் என்ன என்பது குறித்து மத்திய அரசு மற்றும் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் தங்களது தரப்பின் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: