சூரப்பா விவகாரத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் மோதல் அமித்ஷாவுடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் திடீர் சந்திப்பு: ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணையம் தொடர்பாக விளக்கம்

சென்னை: சூரப்பா விவகாரத்தில் ஆளுநருக்கும் அரசுக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அமித்ஷாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்தார். முதல் நாளில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அவரை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். மேலும் பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிலையில் 2ம் நாளான நேற்று காலை தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் நிலவரம், தமிழக அரசியல் நிலவரம், அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இதில் உயர்கல்வி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவும், விசாரணை ஆணையம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர் என்ற காரணத்தால் தான் ஆளுநர் அவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்ததாக தொடக்கத்தில் இருந்தே கூறப்பட்டது. மேலும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமிக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையும் மீறி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டார்.

அவர் நியமிக்கப்பட்டது முதல் அரசுக்கும் அவருக்கும் இடையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது, அரியர் தேர்வு மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை சூரப்பா எடுத்து வந்தார். மேலும் இது தொடர்பாக வெளிப்படையாகவும் பேசி வந்தார். இந்நிலையில் சூரப்பா மீதான ரூ.250 கோடி ஊழல் குற்றச்சாட்டு, பணி நியமனத்தில் முறைகேடு உள்ளிட்டவைகள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை நியமித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து பணியை தொடங்கிய நீதிபதி கலையரசன், சூரப்பா நியமிக்கப்பட்டது முதல் அனைத்து நிகழ்வுகளும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்து கொண்டே இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் சூரப்பா விவகாரத்தில் ஆளுநர்-அரசுக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அமித்ஷாவை சந்தித்த முதல்வரிடம் இது தொடர்பாக கேட்டதாக கூறப்பட்டது. அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிப்பார் என்று முதல்வர் கூறியதாகவும் தகவல் வெளியானது.

இதன்படி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று காலை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது சூரப்பா விவகாரம் தொடர்பாக கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்தார்.

மேலும் சூரப்பா மீதான குற்றச்சாட்டு, அவரின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் தொடர்பாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதற்கான காரணம் தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவை சந்தித்த முதல்வரிடம் சூரப்பாவை பற்றி கேட்டதாக கூறப்பட்டது. அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிப்பார் என்று முதல்வர் கூறியதாகவும் தகவல் வெளியானது.

Related Stories: