கொரோனா குறைவதால் பயம் போயிருச்சு... சாலையோர கடைகளில் ‘மாஸ்க்’ விற்பனை சரிவு

சேலம்: கொரோனா வைரஸ் குறைந்து வரும் நிலையில் சாலையோர கடைகளில் மாஸ்க் விற்பனை 70 சதவீதம் வரை சரிந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதனால் முகக்கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ₹200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது மக்களும் பயந்துபோய் தவறாமல் மாஸ்க் அணிந்து சென்றனர். இதனால் மாஸ்க் விற்பனை முழு ஊரடங்கு நாட்களில் உச்சத்தை அடைந்தது. தமிழகத்தில் அனைத்து தொழில்களும் மந்தமான நிலையில் மாஸ்க், கையுறை, கிருமி நாசினி மற்றும் சோப்பு போன்றவைகளின் விற்பனை அமோகமாக இருந்தது.

இதனை பயன்படுத்தி வறுமையில் இருப்பவர்கள், இளைஞர்கள் என ஏராளமானவர்கள் சாலையோரங்களில் மாஸ்க் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினர். நாளுக்கு நாள் மாஸ்க் விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதை பார்க்க முடிந்தது. இதன் மூலம் மாஸ்க் விற்பனையாளர்களுக்கு ஓரளவு வருமானமும் கிடைத்தது.

 

இந்நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. பொது பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான இ-பாஸ் முறை ரத்து செய்ப்பட்டது. கோயில்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டன. இதனால் தற்போது மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.

கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பரவல் வேகம் உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைய தொடங்கியது. மேலும், ஒரு சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 10க்கும் கீழ் பதிவாகி வருகிறது. சேலத்தில் தினமும் 200க்கும் மேல் பதிவாகி வந்த நிலையில், தினமும் 100க்கும் கீழ் குறைந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் செல்வோர்களில் பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. ஒரு சிலர் பெயரளவிற்கு கழுத்தில் அணிந்து கொண்டு செல்கின்றனர். மேலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே முறையாக மாஸ்க் அணிந்து செல்கின்றனர்.

சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மாஸ்க் உள்ளிட்டவை விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது, 20க்கும் குறைவானர்கள்தான் விற்பனை செய்து வருகின்றனர்.  இதனால் சாலையோரங்களில் மாஸ்க் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா தொற்று வேகமாக பரவும் போதும், ஊரடங்கு நாட்களிலும் மாஸ்க் விற்பனை அதிகளவில் இருந்தது. ஒரு நாளைக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

குறிப்பாக மாஸ்க் ரூ.10 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில் தினமும் 3 ஆயிரம் மாஸ்க் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 30 சதவீதம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 70 சதவீத மாஸ்க் விற்பனை குறைந்து விட்டது.தற்போது, அவரசத்திற்கு மாஸ்க் வாங்குவோர் கூட ரூ.10க்கு விற்கப்படும் சாதாரண மாஸ்குகளை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர். பெரும்பாலானோர் மாஸ்க்  அணியாமல் சாலைகளில் நடந்து செல்கின்றனர். ஒருசிலர், போலீசுக்கு பயந்து வாங்கி செல்கின்றனர்’’ என்றனர்.

Related Stories: