தேசிய மகளிர் அணி பாஜ தலைவராக பதவியேற்பு: கூட்டணிக்காக அதிமுகவுடன் எங்கள் கருத்தில் சமரசம் செய்ய முடியாது: வானதி சீனிவாசன் பேட்டி

சென்னை: தமிழக பாஜ துணை தலைவராக இருந்த வானதி சீனிவாசன், பாஜ தேசிய மகளிர் அணி தலைவராக கடந்த 28ம் தேதி நியமிக்கப்பட்டார். நேற்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு சென்றார். தொடர்ந்து தேசிய மகளிர் அணி தலைவர் அறைக்கு சென்று அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு முறைப்படி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.  தொடர்ந்து அவர் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பதவியேற்புக்கு பின் வானதி சீனிவாசன் அளித்த பேட்டி: தமிழகத்தில் பாஜ வளர்ந்து வரும், மக்களின் விருப்பமான கட்சியாக உள்ளது.

அதனால் தான் நடைபெற்று வரும் வேல் யாத்திரையில் மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதற்கு மாநில அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தற்போதுவரை பாஜ-அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது. வர வாய்ப்பும் இல்லை. கூட்டணிக்காக கருத்தில் சமரசம் செய்ய முடியாது. கூட்டணியில் அடுத்தடுத்து வரும் காலகட்டங்களில் டெல்லி தலைமை தான் இறுதி முடிவு செய்யும். இருப்பினும், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதே பாஜவின் லட்சியமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: