ரஷ்ய நாட்டை சேர்ந்த தமிழ் அறிஞர் அலெக்சாண்டர் துபியான்சுகி கொரோனா காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்ய நாட்டை சேர்ந்த தமிழ் அறிஞர், பேராசிரியர், டாக்டர் அலெக்சாண்டர் துபியான்சுகி காலமானார். அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்சுகி ஏப்ரல் 27, 1941-ம் ஆண்டு மாஸ்கோவில் பிறந்தார். மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்துரைப்பதுடன், தமிழ்நாட்டு பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவர். மாஸ்க்கோ அரசு பல்கலை கழகத்தில் இந்திய மொழியியல் துறை தலைவராக பணியாற்றிய டாக்டர் துபியான்சுகி தமிழ் இலக்கியத்தை முறைப்படி கற்று தேர்ந்தவரும் தமிழ் இலக்கிய பேராசிரியரும் ஆவர். ரஷ்யாவை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ் மீது மிகுந்த பற்றுடைய துபியான்சுகி தமிழ் மொழியை சரளமாக பேசுவதிலும், தமிழ் மொழியை போதிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

79 வயதான அவர் கொரோனா வைரசு பாதிப்பு உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் அலெக்சாண்டர் துபியான்சுகி காலமானார். உலகம் முழுவதும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புக்களை துபியான்சுகி எடுத்து கூறியவர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் கவிதைகள், கட்டுரைகளை அவர் ரஷ்ய மொழியில் மொழி பெயப்பு செய்துள்ளார். ரஷ்ய தமிழ் அறிஞர் அலெக்ஸாண்டர் துபியான்சுகியின் மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: